தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் செயலி மூலம் வருகைப்பதிவு செய்யும் நடைமுறை அமலுக்கு வந்தது

சென்னை:தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் செயலி மூலம் வருகைப்பதிவு செய்யும் நடைமுறை அமலுக்கு வந்தது.  தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் 10 இயக்குநர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 14 ஆயிரத்து 709 பணியாளர்கள் உள்ளனர். தொடக்க கல்வித்துறையின் கீழ் 31 ஆயிரத்து 336 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 537 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். பள்ளிக் கல்வி துறையின் கீழ் 6,218 உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 863 பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் நாள்தோறும் பணிக்கு வரும் போது அந்தந்த அலுவலக வருகைப் பதிவேடுகளில் 10 மணிக்குள் கையொப்பமிட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அண்மையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் அரசு பள்ளி ஆசிரியர்கள், கல்வித்துறை பணியாளர்கள் பணிக்கு வரும்போது தங்கள் வருகையை புதிய செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த புதியமுறை இன்று முதல் நடைமுறைக்கு வந்தது.

மேலும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில், பள்ளிகளில் கற்றல் பணிகள் சிறப்பாக இருக்க, தலைமை ஆசிரியர்கள் ஏதேனும் ஒரு வகுப்பிற்கு சென்று பாடம் கற்பிக்க வேண்டும். கல்வி அலுவலர்கள் மற்றும் கலெக்டர்கள் அனுமதியின்றி பள்ளிக்கு விடுமுறை அளிக்க கூடாது. மேலும், ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, ஈட்டிய  விடுப்பு கோருதல் அனுமதி மற்றும் பிற பணி சார்ந்த தேவைகளுக்கு விண்ணப்பிக்க TNSED-School செயலியை மட்டும் பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் வட்டார கல்வி அதிகாரிகள் பள்ளி ஆய்வு பணிகளை முக்கியமாக மேற்கொள்ள வேண்டும். மாணவர்களின  வருகையை வகுப்பு வாரியாக EMIS ல் பதிவு செய்ய வேண்டும்,எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: