விடிய விடிய கொட்டிய கனமழை!: கொடிவேரி அணைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிப்பு..!!

ஈரோடு: கோபி அருகே உள்ள கொடிவேரி அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் வெளியேற்றப்படும் தண்ணீர் கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் தேக்கப்பட்டு தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் பாசனத்திற்கு விடப்படும். இந்நிலையில் கொடிவேரி அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் கொடிவேரி அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பாதுகாப்பு கம்பிகளை தாண்டி தண்ணீர் வெளியேறி வருவதால் கொடிவேரி அணைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பழனி மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த மழையால் வரதமாநதி நீர் தேக்கத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

66 அடி உயரம் கொண்ட வரதமாநதி நீர் தேக்கம் ஏற்கனவே நிரம்பி இருந்த நிலையில், நேற்று இரவு பெய்த கனமழையால் தண்ணீர் வரத்து வினாடிக்கு 628 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் நீர் தேக்கத்திற்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதேபோல பழனியில் உள்ள பாலாறு, பொருத்தலாறு அணை, குதிரையாறு அணையிலும் நீர்வரத்து அதிகரித்து வேகமாக நிரம்பி வருகிறது. 

Related Stories: