இதயக் கோளாறு உட்பட கொரோனா பாதித்த நோயாளி எப்படி இறந்தாலும் இழப்பீடு: அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பு

பிரயாக்ராஜ்: ‘கொரோனாவுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் இதயக்கோளாறு அல்லது வேறு எந்த ஒரு உடல்நல பாதிப்பினால் இறந்தாலும் அதை கொரோனாமாக கருதி இழப்பீடு வழங்க வேண்டும்,’ என கருத வேண்டும் என்று  அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 30 நாட்களுக்குள் இறந்தால்தான் உரிய இழப்பீடு வழங்கப்படும். இதயக்கோளாறு அல்லது உடலின் வேறு எந்த பாகங்களிலும் பாதிப்பு ஏற்பட்டு மரணம் நிகழ்ந்தால் அதை கொரோனா தொற்று மரணம் என  ஏற்க முடியாது என்று உபி அரசு கடந்தாண்டு அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து குசுமலதா யாதவ் உட்பட பலர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

அதில், ‘கடந்தாண்டு நடந்த பஞ்சாயத்து தேர்தலில் மாநிலத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்தது. இதில் எங்கள் குடும்ப உறவினர்கள் பலரை இழந்துள்ளோம். ஆனால், உபி அரசு நிர்ணயித்துள்ள 30 நாள் காலக்கெடுவால் இழப்பீடு பெற முடியவில்லை,’ என்று குறிப்பிட்டனர். இதை விசாரித்த நீதிபதிகள் ஏ.ஆர்.மசூதி, விக்ரம் டி.சவுகான் அமர்வு, ‘கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் மருத்துவமனையில் இறந்தால் அவருடைய இறப்புக்கு இதயக்கோளாறு மற்றும் வேறு எந்த உடல் நல பிரச்னைகள் இருக்கலாம். ஆனால், அதை கொரோனாவால் ஏற்பட்ட மரணமாகத்தான் கருத வேண்டும். கொரோனா பலி நிவாரணம் பெறுவதற்கு 30 நாட்கள் காலக்கெடு விதிப்பதை ஏற்க முடியாது. கொரோனா பாதித்தவர்கள் 30 நாளுக்கு பின்னரும் இறந்துள்ளனர். எனவே, வழக்கு தொடுத்தவர்களுக்கு உபி அரசு ஒரு மாதத்துக்குள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்,’ என்று உத்தரவிட்டனர்.

Related Stories: