×

நாடாளுமன்றம் இன்றும் சுமுகமாக நடப்பது சந்தேகம்: எதிர்க்கட்சிகள் திடீர் வியூகம்

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18ம் தேதி தொடங்கி வரும் 12ம் தேதி வரை நடக்க உள்ளது. கூட்டத் தொடரின் முதல் நாளில் இருந்து விலைவாசி உயர்வு தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. இதற்கு ஒன்றிய அரசு சம்மதிக்காததால் கடும் அமளி ஏற்பட்டு இரு அவைகளும் முடங்கின. குறிப்பாக, மாநிலங்களவையில் இதுவரை எந்த மசோதாவும் நிறைவேற்றப்படவில்லை. இதைத் தொடர்ந்து, வார விடுமுறைக்குப் பின் இன்று முதல் நாடாளுமன்றம் மீண்டும் கூட உள்ள நிலையில், திங்கட்கிழமை மக்களவையிலும், அடுத்த நாள் மாநிலங்களவையிலும் விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடத்த ஆளும் தரப்பு ஒப்புக் கொண்டுள்ளது.

இதனால், இன்று முதல் அவை சுமூகமாக நடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தங்களின் மற்றொரு முக்கிய கோரிக்கையான அக்னிபாதை திட்டம் குறித்தும் விவாதம் நடத்த வேண்டுமென வலியுறுத்த பல்வேறு எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்னும் 10 நாட்கள் மட்டுமே கூட்டத்தொடர் எஞ்சி உள்ளதால், அக்னிபாதை திட்டம் குறித்து கட்டாயம் விவாதம் நடத்த வலியுறுத்தப் போவதாக எதிர்க்கட்சி எம்பிக்கள் சிலர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஏற்கனவே இரு அவைகளும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 3 ஒத்திவைப்பு நோட்டீஸ்களை வழங்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

Tags : Parliament , Doubts that Parliament will run smoothly even today: Opposition parties sudden strategy
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...