×

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குப்பையில் வீசிய பாட்டில்களில் மீண்டும் குளிர்பானம் விற்பனை: வைரலாகும் வீடியோ

அண்ணாநகர்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு கடையில், குப்பையில் வீசப்பட்ட காலி பாட்டில்களை எடுத்து அதில் மீண்டும் சுகாதாரமற்ற முறையில் குளிர்பானம் நிரப்பி விற்பனை செய்யப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு தமிழகம் மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து தினம்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வந்து செல்லும் பொதுமக்களின் தேவைக்காக, பேருந்து நிலைய வளாகத்தில் குளிர்பான கடைகள், ஓட்டல்கள், டீ கடைகள் நொறுக்கு தீனி கடைகள் என சுமார் 45 கடைகள்  செயல்பட்டு வருகிறது.

இங்குள்ள கடைகளில் உணவு பொருட்கள் பல மடங்கு விலை அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக கடந்த சில நாட்களுக்கு முன் குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பேரில், அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு நடத்தி, கூடுதல் விலைக்கு உணவு விற்றால் கடைக்கு சீல் வைக்கப்படும் என எச்சரித்தனர். இந்நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு கடையில், சிறிய அளவிலான பிளாஸ்டிக் பாட்டிலில் பாதாம் மற்றும் பிஸ்தா பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த கடையில் குளிர்பானம் வாங்கி குடித்துவிட்டு, பொதுமக்கள் குப்பையில் வீசும் காலி பாட்டில்களை சிறுவர்கள் மூலம் கடை ஊழியர்கள் சேகரித்து, அதை கழுவிவிட்டு, மீண்டும் அதில் குளிர்பானத்தை நிரப்பி சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த காட்சிகளை பயணி ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து, வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற  சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ‘‘கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் சிறுவர் சாப்பிடும் ஸ்நாக்ஸ் பெரும்பாலும் காலாவதி ஆகி உள்ளது. அதேபோல் டீ கடையில் பஜ்ஜி, போண்டா திறந்த நிலையில் விற்கப்படுகிறது. இதுகுறித்து,  உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார்கள் தெரிவித்தும், அவர்கள் கண்டுகொள்ளாமல் இது போன்ற கடைகளை ஆய்வு செய்வதில் மெத்தனம் காட்டி வருகின்றனர்’’ என்றனர்.

இதனிடையே சுகாதாரமற்ற குளிர்பான விற்பனை தொடர்பாக வீடியோ வைரலானதை தொடர்ந்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மேற்கண்ட கடையில் ஆய்வு நடத்தி, தரமற்ற குளிர்பானத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.

Tags : Coimbed ,station , Koyambedu bus station, sale of discarded bottles, soft drinks
× RELATED திருப்போரூர் காவல் நிலையத்தில் மின்மாற்றியில் தென்னை ஓலை உரசி தீ விபத்து