வியாசர்பாடி சர்மா நகரில் புதர்மண்டிய கழிவுநீர் கால்வாய்

பெரம்பூர்: சென்னை மாநகராட்சி, வியாசர்பாடி 45வது வார்டுக்கு உட்பட்ட அம்பேத்கர் கல்லூரியில் இருந்து எருக்கஞ்சேரி பாலம் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு குடியிருப்புகளின் மத்தியில் கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் அம்பேத்கர் கல்லூரி சாலை தொடங்கி எருக்கஞ்சேரி வரை பல இடங்களில் செடி, கொடிகள் முளைத்தும், குப்பை நிரம்பியும் தூர்ந்து, கால்வாயில் தண்ணீர் போக முடியாத அளவிற்கு உள்ளது.

மேலும், அப்பகுதி மக்கள் சிலர் குப்பை கழிவுகளை இந்த கால்வாயில் கொட்டுவதாலும், இரவு நேரங்களில் உணவகங்களில் இருந்து கழிவுகளை கொண்டு வந்து இந்த கால்வாயில் கொட்டுவதாலும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. அதுமட்டுமின்றி கொசு உற்பத்தி அதிகரித்து சுற்றுப்பகுதி மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதே பகுதியில் கடந்த வாரம் 3 பேருக்கு மலேரியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே, கால்வாயை சுத்தம் செய்யும்படி, மாநகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை இப்பகுதி மக்கள் வலியுறுத்தியும், இதுவரை அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. கடைசியாக 2020ம் ஆண்டு இந்த பகுதியில் இந்த கால்வாய் தூர்வாரப்பட்டதாகவும், அதன் பிறகு தற்போது வரை இந்த கால்வாய் தூர்வாரி சீரமைக்கப்படவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அம்பேத்கர் கல்லூரி பகுதியில் இருந்து எருக்கஞ்சேரி வரை உள்ள இந்த கால்வாயை சுத்தம் செய்து கழிவுநீர் செல்ல வசதி செய்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: