×

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 953 தெருக்களில் தூர்வாரும் பணி: குடிநீர் வாரியம் அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 953 தெருக்களில் நாளை முதல் 6ம் தேதி வரை தூர்வாரும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது, என குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
 சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் பகுதி அலுவலகம் 1 முதல் 15 வரை உள்ள தெருக்களில் கழிவுநீர் செல்லும் குழாய்கள் மற்றும் இயந்திர நுழைவாயில்களில் உள்ள கசடுகளை அகற்றி தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, 1,425 தெருக்களில் உள்ள 11,427 இயந்திர நுழைவாயில்களை தூர்வாரும் பணி கடந்த வாரம் 21ம் தேதி முதல் 30ம் தேதி வரை குடிநீர் வாரியம் சார்பில் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக நாளை முதல் 6ம் தேதி வரை 2ம் கட்ட தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து பகுதி-1 முதல் 15 வரை உள்ள தெருக்களில் இயந்திர நுழைவாயில்களில் உள்ள கசடுகளை அகற்றும் பணிகள் நடைபெறுகிது. அதன்படி திருவொற்றியூர் மண்டலத்தில் 84 தெருக்கள், மணலி மண்டலத்தில் 24 தெருக்கள், மாதவரம் மண்டலத்தில் 12 தெருக்கள், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 90 தெருக்கள், ராயபுரம் மண்டலத்தில் 90 தெருக்கள், திரு.வி.க.நகர் மண்டலத்தில் 92 தெருக்கள், அம்பத்தூர் மண்டலத்தில் 75 தெருக்கள், அண்ணாநகர் மண்டலத்தில் 90 தெருக்கள், தேனாம்பேட்டை மண்டலத்தில் 114 தெருக்கள், கோடம்பாக்கம் மண்டலத்தில் 96 தெருக்கள், வளசரவாக்கம் மண்டலத்தில் 36 தெருக்கள், ஆலந்தூர் மண்டலத்தில் 54 தெருக்கள், அடையாறு மண்டலத்தில் 78 தெருக்கள், பெருங்குடி மண்டலத்தில் 6 தெருக்கள், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 12 தெருக்கள் என மொத்தம் 953 தெருக்களில் தூர்வாரும் பணிகள் நடக்கிறது.

இந்த 953 தெருக்களில் 282 தூர்வாரும் இயந்திரங்கள், 161 ஜெட்ராடிங் இயந்திரங்கள் மற்றும் 57 கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரங்கள் என மொத்தம் 500 கழிவுநீர் இயந்திரங்கள் மூலம் பெருமளவில் கழிவுநீர் செல்லும் குழாய்கள் மற்றும் இயந்திர நுழைவாயில்களில் உள்ள கசடுகளை அகற்றி தூர்வாரப்படும். எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள தெருக்களில் கழிவுநீர் அடைப்பு, வழிந்தோடுதல் தொடர்பான புகார்களை சம்பந்தப்பட்ட பகுதி அலுவலகத்திலும் மற்றும் பணிமனை அலுவலகத்திலும் தொடர்பு கொண்டு குறைகளை நிவர்த்தி செய்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : 953 streets ,Chennai Corporation ,Drinking Water Board , Chennai Municipal Corporation, street dredging work, drinking water board notification
× RELATED குடிநீர் கட்டணங்களை செலுத்த மார்ச்...