×

சென்னையில் காற்று மாசு அளவை கண்டறிய 5 கண்காணிப்பு நிலையங்கள்: ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னையில் காற்று மாசு அளவை பதிவு செய்ய 5 கண்காணிப்பு நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், ஒன்றை மாநகராட்சியின் தலைமையிடமான ரிப்பன் மாளிகையில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காற்று பல்வேறு வகைகளில் மாசடைகிறது.  குறிப்பாக தொழிற்சாலைகளிலிருந்து வரும் புகை, பிளாஸ்டிக் எரிப்பதனால்  வரும் நச்சு புகை உள்ளிட்ட பலவகைளில் மாசடைகிறது. ஆனால், நாம் அன்றாட  பயன்படுத்தும், நம்மிடமிருந்து பிரிக்க முடியாத, அத்தியாவசியமாகிவிட்ட  பைக், கார் ஆகியவற்றிலிருந்து வரும் புகை காற்றை பெருமளவு  மாசுபடுத்துகிறது.

வாகன புகையில் கலந்துள்ள சல்பர் டையாக்ஸைடு, கார்பன்  மோனாக்சைடு உள்ளிட்ட நச்சுக்கள் காற்றில் கலந்து நாம் சுவாசிக்கக்கூடிய  காற்றை விஷமாக மாற்றுகின்றன. நாம் சுவாசிக்கும் காற்று எவ்வளவு  மாசடைந்துள்ளது. அதில் என்னென்ன நச்சுக்கள் கலந்துள்ளன என்பதை நாம் கண்ணால்  கண்டதுண்டா என்றால் இல்லையென்று தான் பதில் வரும்.
உலக சுகாதார அமைப்பு நிர்ணயம் செய்துள்ள  வரம்பை விட சென்னையின் காற்றில் மாசுபாடு அதிகமாக உள்ளது. மேலும் பிஎம்  2.5க்கான வரம்புகளின் நிலை 5 ஆகும். சென்னையில் நவம்பர் 2020 முதல் நவம்பர்  2021 வரை 2.5க்கான கணக்கிடப்பட்ட சராசரி அளவு 27 ஆகவுள்ளது. மணலி,  கொடுங்கையூர், பெருங்குடி, ராயபுரம் மற்றும் வேளச்சேரியில் 2.5 அளவு  அனுமதிக்கப்பட்டதை விட மிகவும் அதிகமாக உள்ளது.

இந்நிலையில், சென்னையில் காற்று மாசு குறித்து ஆய்வு செய்ய சென்னை மாநகராட்சி மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, சென்னையில் 5 இடங்களில் காற்று மாசு கண்டறிய கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.  இதுகுறித்து ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகள் கூறுகையில், ‘2021-22ம் ஆண்டுக்கான 15வது நிதி ஆணையம் தேசிய தூய்மையான காற்று திட்டத்தின் கீழ், ரூ.91 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதன்மூலம், தொழில்துறை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் இந்த கண்காணிப்பு நிலையம் அமைக்கப்படும். ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அளவுகோல்களின்படி, 50 லட்சம் பேருக்கு நான்கு காற்றின் தர கண்காணிப்பு நிலையங்கள் இருக்க வேண்டும்.

சென்னையில் காற்றின் தரத்தை உறுதிப்படுத்த இப்போது நாங்கள் மேலும் 5 காற்றின் தர கண்காணிப்பு நிலையங்களை சேர்க்கிறோம். இதில், ஒன்று மாநகராட்சியின் தலைமையிடமான ரிப்பன் மாளிகையில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை ஐஐடி, இந்த கண்காணிப்பு நிலையங்கள் வைக்கப்படும் இடங்களை ஆய்வு செய்து வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த நிலையங்கள் காற்றின் தரத்தை கண்காணிக்கும்,’ என்றார்.

Tags : Chennai ,Smart City , Air pollution in Chennai, 5 monitoring stations, Smart City officials information
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...