பளுதூக்குதலில் இந்தியாவுக்கு 2வது தங்கம்: புதிய சாதனையுடன் லால்ரின்னுங்கா அசத்தல்

பர்மிங்காம்: காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடரின் ஆண்கள் பளுதூக்குதல் 67 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் ஜெரிமி லால்ரின்னுங்கா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இறுதிப் போட்டியில் அபாரமாக செயல்பட்ட லால்ரின்னுங்கா (19 வயது) ஸ்நேட்ச் முறையில் 140 கிலோ மற்றும் கிளீன் & ஜெர்க் முறையில் 160 கிலோ என மொத்தம் 300 கிலோ தூக்கி முதலிடம் பிடித்தார். சமோவா வீரர் வைபவா நெவோ லோனே 293 கிலோ எடை தூக்கி (127 கிலோ + 166 கிலோ) வெள்ளிப் பதக்கமும், நைஜீரியாவின் ஜோசப் உமோபியா (130 கிலோ + 160 கிலோ) வெண்கலமும் வென்றனர்.

மிசோரம், ஐஸால் நகரை சேர்ந்த லால்ரின்னுங்கா, கிளீன் & ஜெர்க் முறையில் பங்கேற்றபோது 2 முறை கடுமையான வலியால் அவதிப்பட்டதால் காயம் காரணமாக வெளியேற நேரிடுமோ என்ற அச்சம் எழுந்தது. எனினும், வலியை பொருட்படுத்தாமல் போட்டியில் தொடர்ந்து பங்கேற்ற அவர் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். அவர் ஸ்நேட்ச் முறையில் 140 கிலோ தூக்கியதும், ஒட்டுமொத்தமாக 300 கிலோ தூக்கியதும் புதிய காமன்வெல்த் சாதனையாக அமைந்தன.

நடப்பு தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த 2வது தங்கப் பதக்கம் இது. பளுதூக்குதலில் கிடைத்த 5வது பதக்கமாகவும் இது அமைந்தது. முன்னதாக மீரா பாய் சானு தங்கம், சங்கேத் சர்கார் மற்றும் வித்யாராணி தேவி வெள்ளி, குருராஜ் பூஜாரி வெண்கலம் வென்றிருந்தனர். தேசிய அளவிலான பாக்சிங் நட்சத்திரம் லால்நெய்த்லுவங்காவின் மகனான லால்ரின்னுங்கா தொடக்கத்தில் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்க விரும்பினாலும், பின்னர் பளுதூக்குதலில் கவனம் செலுத்தி சாதனை படைத்து வருகிறார்.

Related Stories: