3வது சுற்றிலும் ஆதிக்கம்: இந்திய அணிகள் ஹாட்ரிக் வெற்றி

சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடரின் 3வது சுற்றிலும் அபாரமாக செயல்பட்ட இந்திய அணிகள் ஓபன் மற்றும் மகளிர் பிரிவில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து அசத்தின.நடப்பு ஒலிம்பியாட் தொடரில் இதுவரை இல்லாத அளவுக்கு 6 அணிகளை களமிறக்கியுள்ள இந்தியா முதல் 2 சுற்றுகளிலும் அபாரமாக வென்று முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் நேற்று நடந்த 3வது சுற்று ஆட்டங்களிலும் இந்தியா ஓபன் மற்றும் மகளிர் பிரிவில் வெற்றிகளைக் குவித்தது.

ஓபன் பிரிவில் கிரீஸ் அணியை எதிர்கொண்ட இந்தியா-1 அணி 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. இந்தியா சார்பில் ஹரிகிருஷ்ணா பென்டாலா, எரிகைசி அர்ஜுன் வெற்றிகளைக் குவிக்க, விதித் சந்தோஷ் குஜராத்தி மற்றும் சசிகிரண் இருவரும் தங்கள் ஆட்டங்களில் டிரா செய்தனர். சுவிட்சர்லாந்துடன் மோதிய இந்தியா-2 அணி 4-0 என முழுமையான வெற்றியை பதிவு செய்தது. இந்தியா சார்பில் களமிறங்கிய குகேஷ், சரின் நிகில், பிரக்ஞானந்தா, சத்வனி ரவுனக் ஆகியோர் வெற்றிகளைக் குவித்தனர்.

மற்றொரு 3வது சுற்று ஓபன் ஆட்டத்தில் இந்தியா-3 அணி ஐஸ்லாந்து அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்தியா-3 அணி 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. இந்திய வீரர்கள் சேதுராமன், அபிஜீத் குப்தா வெற்றிகளைப் பதிவு செய்ய, சூரிய சேகர் கங்குலி மற்றும் புரானிக் அபிமன்யு தங்கள் ஆட்டங்களை டிரா செய்து அரை புள்ளி பெற்றனர். மகளிர் பிரிவு 3வது சுற்றில் இங்கிலாந்தை சந்தித்த இந்தியா 1 அணி 3-1 என்ற கணக்கில் வென்றது. இந்திய வீராங்கனைகள் வைஷாலி, பக்தி குல்கர்னி வெற்றி பெற்று தலா 1 புள்ளி பெற்ற நிலையில், யாவோ லானுடன் மோதிய டானியா சச்தேவ், ஹூஸ்கா ஜோவன்காவுடன் மோதிய ஹரிகா துரோணவல்லி டிரா செய்து அரை புள்ளியுடன் திருப்தி அடைந்தனர்.

மற்றொரு 3வது சுற்றில் இந்தியா-2 அணியுடன் இந்தோனேசியா மோதியது. இந்த போட்டியில் இந்தியா-2 அணி 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. வந்திகா அகர்வால், சவும்யா சாமிநாதன் வெற்றி பெற்ற நிலையில், பத்மினி ராவுத் மற்றும் மேரி ஆன் கோம்ஸ் டிரா கண்டனர்.மகளிர் பிரிவு 3வது சுற்றில் ஆஸ்திரியாவுக்கு எதிராகக் களமிறங்கிய இந்தியா-3 அணி கடுமையாகப் போராடி 2.5-1.5 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. இந்திய வீராங்கனைகள் நந்திதா, பிரத்யுஷா வெற்றியை வசப்படுத்த, ஆஸ்திரியாவின் மேரூபர் நிகோலாவிடம் சாஹிதி வர்ஷினி தோல்வியைத் தழுவினார். கர்வாதே ஈஷா - நியூர்க்லா கேதரினா (ஆஸ்திரியா) மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது.

Related Stories: