×

இந்தியாவிலேயே சிறந்த காவல்துறையாக தமிழக காவல்துறை விளங்குகிறது: துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு புகழாரம்

சென்னை: இந்தியாவிலேயே சிறந்த காவல்துறையாக தமிழக காவல்துறை விளங்குகிறது என்று துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ஜனாதிபதியின் கொடி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு பங்கேற்று ஜனாதிபதியின் காவல் துறை கொடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். பிறகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், குண்டுகள் முழங்க தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவிடம் கொடியை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு பேசியதாவது: தமிழக காவல்துறையின் வரலாற்றில் இந்நாள் மிகுந்த சிறப்புக்குரிய நாளாக இருக்கும். இது தமிழர்கள் ஒவ்வொருவரும் மிகுந்த பெருமிதம் அளிக்க கூடிய தருணமாக அமைவதோடு இந்தியாவின் முப்படைத் தளபதியின் சார்பில் இந்த கவுரவத்தை தமிழக காவல்துறைக்கு வழங்குவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நாட்டிலேயே அதிக அளவிலான மகளிர் காவல் நிலையங்களையும், அதிக பெண் காவலர்களைக் கொண்ட 2வது மாநிலமாகவும் தமிழகம் இருக்கிறது. நாட்டில் பெண் கமாண்டோ படைப்பிரிவை அமைத்த முதல் மாநிலம் தமிழகம். 46 இணைய குற்ற காவல் நிலையங்களுடன் இணைய குற்றங்களுக்கென தமிழக காவல்துறையில் தனிப்பிரிவு ஒன்று தொடங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ரூ.6.90 கோடி செலவில் டிஸ்க் தடயவியல், நடமாடும் தடயவியல் மற்றும் சமூக ஊடக சாதனங்கள், அதி நவீன தடயவியல் பணியிடத்துடன் கூடிய இணைய தடயவியல் ஆய்வகம் அமைக்கப்படுவதாக அறிந்தேன்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏற்படுத்தியுள்ள நாட்டின் ஒரே மாநிலம் தமிழகம் என்பது சிறப்புக்குரியதாகும். 1076 கிலோ மீட்டர் நீளமுள்ள நீண்ட கடற்கரை பகுதியை கொண்ட தமிழ்நாடு, ‘கடலோர பாகாப்பு குழுமம்’ என்ற பெயரில் மிக சிறந்த கடலோர பாதுகாப்பு பிரிவை கொண்டதாக உள்ளது. காவல்துறையினரின் மன அழுத்தத்தை போக்கவும், மதுப்பழக்கம் மற்றும் தற்கொலைகளை தடுக்கவும் ‘காவலர் நலத் திட்டங்கள்’ தொடங்கும் நாட்டின் ஒரே மாநிலம் தமிழகம் திகழ்கிறது. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பின்னணியாக உள்ள காரணங்களில் பொது அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தை பராமரிப்பதில் மாநில காவல்துறையின் பங்களிப்பு ஒன்றாகும். மாநிலம் முழுவதும் அமைதியை நிலைநாட்டி, பொருளாதார வளர்ச்சி மற்றும் வளமைக்கு உகந்த சூழலை உருவாக்கி வருவதற்காக, தமிழக காவல்துறையில் பணியாற்றும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்”.
இவ்வாறு துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு பேசினார்.

Tags : Tamil Nadu Police ,India ,Vice President ,Venkaiah Naidu , Tamil Nadu Police is the best police force in India: Vice President Venkaiah Naidu praises
× RELATED கை சின்னத்துக்கு போடும் ஓட்டு.. மோடிக்கு வைக்கும் வேட்டு..