×

தொடர் மழை காரணமாக தமிழக நீர் மின் நிலையங்களில் உற்பத்தி அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்யும் தொடர் மழை காரணமாக நீர் மின் நிலையங்களில் அதிகளவில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக மின் வாரியத்திற்கு சொந்தமாக நீலகிரியில் குந்தா, கோவையில் காடம்பாறை, திருநெல்வேலி, ஈரோடு ஆகிய, நான்கு மின் உற்பத்தி வட்டங்கள் உள்ளன.  இங்கு 2,321 மெகா வாட் திறனில், 47 நீர் மின் நிலையங்கள் உள்ளன. கோவை மாவட்டம், காடம்பாறையில் உள்ள, 400 மெகா வாட் திறன் உடைய நீரேற்று மின் நிலையத்தில் மட்டும், மின்உற்பத்திக்கு மறுசுழற்சி முறையில் மின்சாரம் உற்பத்தியாகிறது. ஒரு யூனிட் நீர் மின் உற்பத்தி செலவு  75 காசு ஆகும். தமிழகத்தில் ஜூன் மாதத்தில் நீர் மின் நிலையங்களில் 500 மெகாவாட் முதல் 700 மெகா வாட் வரை மட்டுமே மின் உற்பத்தி செய்யப்பட்டது.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மலை பகுதிகளில் இம்மாத துவக்கத்தில் இருந்து, பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மேலும், கர்நாடகாவில் பெய்யும் கனமழையால், அங்கிருந்து தண்ணீர் அதிகமாக திறந்து விடப்பட்டு, மேட்டூர் அணைக்கு வந்து சேர்கிறது. இதேபோல் தேனியில் உள்ள பெரியாறு, திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், கோவை, காடம்பாறை, சோலையாறு அணைகளை ஒட்டிய பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் இந்த அணைகளில் இருந்தும் பாசனத்திற்கு அதிக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தற்போது நீர் மின் நிலையங்களில் தினந்ேதாறும் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவும் அதிகரித்துள்ளது. அதாவது இம்மாத்தின் தொடக்கத்தில் தினந்தோறும் 1,000 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. தற்போது இது மேலும் அதிகரித்து நாள்தோறும் 1,400 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

தமிழகத்தில் முக்கிய மின் உற்பத்தி நிறுவு திறன்
வகை    மெகாவாட்
அனல்    4,320       
காற்றாலை    8,615                     
சூரியசக்தி    5,303            
நீர்    2,321

Tags : Tamil Nadu , Production increase in Tamil Nadu hydropower plants due to continuous rains
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...