காவலன் செயலி பெண்களுக்கு மிகுந்த உபயோகமாக உள்ளது: மாநில மகளிர் ஆணைய தலைவி பேட்டி

தர்மபுரி: தமிழகத்தில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் காவலன் செயலி பெண்களுக்கு மிகுந்த உபயோகமாக உள்ளது என, மாநில மகளிர் ஆணையத் தலைவர் குமரி தெரிவித்தார். மாநில மகளிர் ஆணையத் தலைவர் குமரி, தர்மபுரியில் நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் இதுவரை 19 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள மகளிர் விடுதிகளில் நேரடியாக ஆய்வு செய்து வருகிறோம். தற்போது விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு, மாதம் தோறும் கட்டாயம் மனநல ஆலோசனை வழங்க பரிந்துரைக்கப்படும். தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு மாற்றாக 6ம் வகுப்பு முதல் முதுகலை கல்லூரி படிப்புவரை, மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தில் சாதி, மதம், இனம் பார்க்காமல், அனைத்து தரப்பு மாணவிகளுக்கும் ஆண்டு வருவாய் மதிப்பீடு பார்க்காமல்,  வழங்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. நிதிநிலை அறிக்கையில் பெண்களுக்கு 3 வகையாக பிரித்து திட்டங்கள் வகுக்கப்படும். இந்த மூன்று வகைகளில் அனைத்து தரப்பு பெண்களுக்கும் பலன் அனுபவிக்கும் வகையில் திட்டம் உள்ளது. தற்போதைய நவீன யுகத்தில் சைபர் குற்றங்கள் பெருகியுள்ளது. கல்லூரி மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன்கள் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். தற்போது பயன்பாட்டில் இருக்கும் காவலன் செயலி, பெண்களுக்கு மிகுந்த உபயோகமாக உள்ளது. பெண்கள் கல்லூரிகளில் நடக்கும் குற்றங்களை தைரியமாக வெளியே சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: