பணபரிவர்த்தனை மோசடி வழக்கில் சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் கைது: 9.5 மணி நேர விசாரணைக்கு பிறகு அமலாக்கத் துறை நடவடிக்கை

மும்பை: பணபரிவர்த்தனை மோசடி வழக்கில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்திடம் ஒன்பதரை மணி நேரம் விசாரணை நடத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள், அவரை நேற்று கைது செய்தனர். பத்ரா சால் மேம்பாட்டு திட்டத்தில் நடந்த மோசடி தொடர்பாக அமலாக்கத்துறையினர் நடத்தி வந்தனர். இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் இந்த வழக்கில் தொடர்புடைய ரூ.11.15 கோடி மதிப்பு சொத்துக்களை தற்காலிகமாக முடக்கினர். இதில், சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத்தின் பெயரில் தாதரில் இருக்கும் நிலங்கள் அடங்கும்.

இது தவிர இந்த வழக்கில் சஞ்சய் ராவுத்தின் உதவியாளர் பிரவீன் ராவுத், சஞ்சய் ராவத்துக்கு நெருக்கமான சுஜித் பட்கரின் மனைவி சுவப்னா பட்கர், மற்றும் சஞ்சய் ராவத்தின் மனைவி ஆகியோர் பெயரில் அலிபாக்கில் கிம் பீச்சில் உள்ள 8 நிலங்களும் முடக்கப்பட்டன. பிரவீன் ராவுத் பத்ரா சால் மேம்பாட்டு திட்டத்தில் நடந்த ரூ.1034 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் இன்னும் நீதிமன்ற காவலில் உள்ளார். இந்த மோசடியில் சஞ்சய் ராவத்துக்கும் தொடர்பு உள்ளதா எனவும், அவரது மனைவி மற்றும் உதவியாளர்கள் இடையே நடந்த பணபரிவர்த்தனையில் சஞ்சய் ராவத்துக்கு எந்த வகையில் தொடர்பு உள்ளது என்பது பற்றியும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது.

இதற்காக அவரிடம் விசாரணை நடத்த பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. இந்நிலையில், நேற்று காலை 7 மணிக்கு, சஞ்சய் ராவத்தின் வீட்டுக்கு அமலாக்கத்துறையினர் வந்தனர். மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர். அவரிடம் சுமார் ஒன்பதரை மணி நேரம் விசாரணை நடத்தினர். வீட்டிலும் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து நேற்று மாலை 4.30 மணியளவில் அவரை கைது செய்து அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். இதனிடையே சஞ்சய் ராவத்தின் வீட்டின் முன் ஏராளமான சிவசேனாவினர் கூடி அவருக்கு ஆதரவாகவும், அமலாக்கத் துறைக்கு எதிராகவும் கோஷம் போட்டனர். சஞ்சய் ராவுத் கைதானதை தொடர்ந்து அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. அந்த அலுவலகம் இருக்கும் சாலையில் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டது.

கைதுக்கு முன்பாக டிவிட்டரில் சஞ்சய் ராவத் வெளியிட்ட பதிவில், ‘நான் எந்த தவறும் செய்யவில்லை. அமலாக்கத்துறைக்கு பயந்து சிவசேனா எம்எல்ஏக்கள் சிலர் ஷிண்டே அணிக்கு ஓடிவிட்டனர். ஆனால் என்னை கைது செய்தாலும் சிவசேனா உடையாது. நான் உயிரை விட்டாலும் விடுவேனே தவிர, சிவசேனாவை விட்டு  ஒரு போதும் பிரியமாட்டேன். அமலாக்கத்துறை விசாரணையில் அரசியல் உள்ளது. நான் கட்சியில் இருப்பதை அவர்கள் (ஏக்நாத் ஷிண்டே மற்றும் ஆதரவாளர்கள்) விரும்பவில்லை. பதவிப்பிரமாணம் ஏற்று ஒரு மாதமாகியும் அவர்களால் அமைச்சரவையை விரிவாக்க முடியவில்லை. இந்த அரசு செயல்படாத அரசாகதான் இருக்கும்’ என குறிப்பிட்டுள்ளார்.

* சிவசேனாவை அழிக்க சதி உத்தவ் குற்றச்சாட்டு

சஞ்சய் ராவத் கைது செய்யப்படுவதற்கு முன், தானே சிவசேனா கட்சியினர் உத்தவ் தாக்கரேயின் வீடான மாதோஸ்ரீக்கு வந்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர். அப்போது பேசிய உத்தவ் தாக்கரே, ‘‘சஞ்சய் ராவுத்தின் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்துகிறது. அவர் கைது செய்யப்படலாம். சிவசேனாவை அழிக்கும் சதி திட்டத்தோடு சஞ்சய் ராவுத் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிர்பந்தம் காரணமாகவே தான் அணி மாறியதாக அர்ஜுன் கோட்கர் எம்.எல்.ஏ. தெரிவித்திருந்தார். மற்றவர்கள் அதை கூட கூறவில்லை’’ என்றார்.

* ‘தவறு செய்யாவிட்டால் பயப்பட தேவையில்லை’

அமலாக்கத்துறை சஞ்சய் ராவத்தை கைது செய்வதற்கு முன்பு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அளித்த பேட்டியில், ‘‘தவறு செய்யவில்லை என்றால், சஞ்சய் ராவத் அஞ்சத் தேவையில்லை. ‘பால்தாக்கரே சத்தியமாக தவறு செய்யவில்லை’ என்று சஞ்சய் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? நிர்ப்பந்தம் காரணமாக, தான் எங்கள் அணிக்கு மாறியதாக அர்ஜூன் கோட்கர் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். அவரை நாங்களா அழைத்தோம்? அமலாக்கத் துறைக்கு பயந்து யாரும் எங்கள் அணிக்கு வரவேண்டாம்’’ என தெரிவித்துள்ளார்.

* ரூ.11.50 லட்சம் பணம் பறிமுதல்

சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் வீட்டை நேற்று சோதனையிட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் அங்கிருந்து கணக்கில் காட்டப்படாத ரூ.11.5 லட்சம் ரொக்க பணத்தை கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சஞ்சய் ராவத்தை கைது செய்த அதிகாரிகள், அவரை அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். அப்போது அங்கிருந்த நிருபர்களை பார்த்து ‘‘நான் யாருக்கும் தலை வணங்கமாட்டேன். உயிரே போனாலும் சிவசேனாவை விட்டு விலகமாட்டேன்’’ என சஞ்சய் ராவத் சத்தமாக கூறினார்.

Related Stories: