தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் நாளை அனைத்து கட்சி கூட்டம்; அதிமுக இரண்டு பிரிவுக்கும் தேர்தல் கமிஷன் அழைப்பு: 2 மணி நேரத்தில் நடந்தது என்ன? எடப்பாடி தரப்பு அதிர்ச்சி

சென்னை: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் நம்பரை இணைப்பது குறித்து நாளை அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் இரண்டு பிரிவுக்கும் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்தது என்பது தொடர்பாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் தொடர்பாக அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் மாநில அளவில் தலைமை தேர்தல் அதிகாரியும், மாவட்ட அளவில் மாவட்ட தேர்தல் அதிகாரியும் (கலெக்டர்கள்) ஆலோசனை நடத்த வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, நாளை தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடக்கிறது. சென்னை தலைமை செயலகத்தில் மாநில அளவில் அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கிறது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான திமுக, காங்கிரஸ், பாஜ, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 9 கட்சிகளுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதிமுக சார்பில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்துக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடிதம் எழுதியிருந்தார். அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து எடப்பாடி தரப்பில் இன்பதுரையும், பொள்ளாட்சி ஜெயராமனும் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது. தங்களுக்கு அழைப்பு வரவில்லை என்பதை தெரிந்தவுடன் ஓபிஎஸ் உடனடியாக தேர்தல் ஆணையம் அதிகாரிகளிடம் போனில் உடனடியாக பேசியதாக கூறப்படுகிறது.

அப்போது நாங்கள் தான் உண்மையான அதிமுக. அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு எங்களுக்கு தான் அழைப்பு விடுக்க வேண்டும். உண்மையான அதிமுக நாங்கள் தான் என்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுகி உள்ளோம். நீதிமன்றத்திலேயும் வழக்கு தொடந்துள்ளோம் என்றும் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து நீங்களும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு வாருங்கள் என்று ஓபிஎஸ் அணிக்கும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பில் முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. அழைப்பு விடுத்த இரண்டு மணி நேரத்தில் தேர்தல் ஆணையம் தனது முடிவை மாற்றி அதிமுகவின் இரண்டு பிரிவினருக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். இது தொடர்பாக உடனடியாக ஓபிஎஸ், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடமும், டெல்லியில் தேர்தல் ஆணையத்திடமும் பேசியதன் காரணமாக தான் தேர்தல் ஆணையம் தனது முடிவை மாற்றியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இது அதிமுகவில் ஒரு தரப்புக்கு அதிர்ச்சியையும், இன்னொரு தரப்பிற்கு மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஓபிஎஸ் தரப்பு அனைத்து கட்சி கூட்டம் விவகாரத்தில் எங்கள் தலைவர் சாதித்து விட்டார். ஆனால் எடப்பாடி தரப்பால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நாங்கள் தான் உண்மையான அதிமுக. அப்படி இருக்கையில், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தான் அழைப்பு அனுப்ப முடியும். ஓபிஎஸ்க்கு எப்படி அழைப்பு விடுக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். அதே நேரத்தில் ேதர்தல் ஆணையத்தை மீறி எதுவும் செய்ய முடியாது என்பதால் எடப்பாடி தரப்பினர் அமைதி காத்து வருகின்றனர்.

Related Stories: