×

சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு அறிவுறுத்தல் எதிரொலி; அன்புநகர் ரயில்வே பாலம் 5 ஆண்டுகளுக்கு பின் முழுமையடைகிறது

நெல்லை: தமிழக சட்டப்பேரவை குழு ஆய்வு செய்து அறிவுறுத்தியதை அடுத்து அன்புநகர்  ரயில்வே பாலம் விடுபட்ட பணியை முடிக்க ரயில்வே துறையினர் நடவடிக்கை  எடுத்துள்ளனர்.
நெல்லை மாநகரில் போக்குவரத்து  நெரிசலை குறைக்க புதிய திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தப்படுகிறது. இதில்  ரயில்வே கிராசிங் பகுதிகளில் பாலம் அமைக்கவும் திட்டமிடப்பட்டு பணிகள்  நடந்தன. இதன்படி தச்சநல்லூர், முன்னீர்பள்ளம் பகுதிகளில் ரயில்வே பாலம் பணி  தொடங்கிய வேகத்தில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. ஆனால் பாளை. அன்புநகர் உழவர் சந்தை அருகே தொடங்கப்பட்ட ரயில்வே பாலம்  கடந்த 5 ஆண்டாக முழுமை பெறாமல் அந்தரத்தில் நிற்கிறது. இந்தப்பகுதியில் 7  சாலைகள் சந்திக்கின்றன. இதனால் திருச்செந்தூர் மார்க்கமாக ரயில்கள் சென்று  திரும்புகையில் கேட் அடைக்கும் போது இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

தினமும் 16 முறை கேட்  அடைத்து திறக்கப்படுகிறது. இதைத் தவிர்க்க இங்கு ரயில்வே மேம்பாலமும் கீழ் பகுதியில்  சுரங்கப் பாதையும் அமைக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி  மாதம் பாலம் கட்டும் பணி துவங்கியது. 695.426  மீட்டர் நீளம், 8.05 மீட்டர் அகலத்துடன் 9 தூண்களுடன் வடக்கு, தெற்காக  பாலம் கட்டப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினரின் பணிகள் முடிந்த நிலையில்  மையப்பகுதியில் தண்டவாளத்தின் மேல் ரயில்வே துறையினர் பாலம் அமைக்கும் பணி  தாமதம் ஏற்பட்டது. அப்பகுதியில் உள்ள சில ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில்  நீதிமன்ற வழக்குகள் காரணமாக தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. அந்தத்  தடைகளும் அகன்ற பின்னரும் பாலம் மையப்பகுதியில் இணைப்புப் பணி தொடராமல்  முடங்கிக் கிடந்தது.

சுமார் 5 ஆண்டுகள் கடந்த நிலையில் இப்பாலம் கட்டியும்  முழுமையடையாததால் மக்கள் பயன்பாட்டிற்கு வராத நிலை தொடர்ந்தது.
இந்த  நிலையில் கடந்த வாரம் நெல்லை வந்த சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழுவினர்  இந்தப் பாலத்தை பார்வையிட்டனர். மேலும் மையப்பகுதி இணைப்புப் பணிகளை உடனடியாக துவங்கி வருகிற ஏப்ரல் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என  ரயில்வே துறையினருக்கும் நெடுஞ்சாலைத் துறையினருக்கும் அறிவுறுத்தினர். இதன்  எதிரொலியாக ரயில்வே துறையினர் மீண்டும் பணியை தொடங்கும் நடவடிக்கையில்  இறங்கியுள்ளனர். மையப்பகுதியில் இரும்பு இணைப்பு பாலம் அமைப்பதற்கான ராட்சத  கார்டர்கள் இப்பகுதியில் இறக்கி வைத்துள்ளனர். விரைவில் இவர்களது மையப்பகுதி  பணி முடிந்ததும் மீதி உள்ள பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் செய்து முடிக்க  தயாராகி வருகின்றனர்.

Tags : Legislation Evaluation Committee ,Anpurnagar Railway Bridge , Parliamentary Appraisal Committee Instruction Echo; Anbunagar Railway Bridge to be completed after 5 years
× RELATED பலாப்பழத்தை பறிக்க மரத்தை...