காண்டூர் கால்வாய் சீரமைப்பு பணி தீவிரம் திருமூர்த்தி அணைக்கு விரைவில் நீர் திறப்பு 2-ம் மண்டல பாசனத்துக்கு பிரதான கால்வாயில் திறக்கப்படுகிறது

உடுமலை: காண்டூர் கால்வாய் சீரமைப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் ஆகஸ்ட் 10ம் தேதி காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறக்க ஏற்பாடு நடந்து வருகிறது. அணை நிரம்பிய பிறகு 2ம் மண்டல பாசனத்துக்கு பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும். திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ளது திருமூர்த்தி அணை. மொத்தம் 60 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் இருந்து கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3.77 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுவதோடு நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீர் வசதி பெற்று வருகின்றன. நான்கு மண்டலங்களாக பிரித்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த அணைக்கு பரம்பிக்குளம் அணையிலிருந்து சர்க்கார்பதி நீர்மின் நிலையம் வழியாக காண்டூர் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்படுகிறது.

அணைக்கு தண்ணீர் கொண்டு வரும் கால்வாய் 49 கிலோமீட்டர் நீளமுடையது. அடர்ந்த வனப்பகுதி வழியாகவும், மலைகளை குடைந்தும் கால்வாய் கட்டப்பட்டுள்ளதால் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே செடி, கொடிகள் முளைத்து கால்வாயின் கரைகள் சேதமடைந்துள்ளன. இதனால் பரம்பிக்குளம் அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் முழுமையாக திருமூர்த்தி அணையை வந்தடைவது இல்லை. காண்டூர் கால்வாயை சீரமைக்க வேண்டுமென விவசாயிகள் பலமுறை கோரிக்கை விடுத்ததன் பெயரில், பொதுப்பணித்துறையினர் அரசுக்கு இதுகுறித்து பரிந்துரை செய்தனர். இதையடுத்து, காண்டூர் கால்வாயை சீரமைக்க அரசு ரூ.72 கோடி நிதி ஒதுக்கியது. இதைத்தொடர்ந்து, கால்வாய் தொடங்கும் இடத்தில் இருந்து 32.100 கிமீ முதல் 43.300 கிமீ தூரம் வரை சீரமைக்க முடிவு செய்யப்பட்டு கடந்த மாதம் பணிகள் துவங்கின.

கால்வாயின் கரைகளில் சேதமடைந்த சிமென்ட் ஸ்லாப்புகள் அகற்றப்பட்டு புதிதாக கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதுவரை 500 மீட்டர் நீளத்துக்கு பணிகள் முடிந்துள்ளன.இதற்கிடையில், 2-ம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட வேண்டி உள்ளது. இதனால் முதல்கட்ட சீரமைப்பு பணியை முடித்துவிட்டு, ஆகஸ்ட் முதல் வாரம் அல்லது 10ம் தேதி வாக்கில் காண்டூர் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதன்மூலம் திருமூர்த்தி அணை நிரம்பியபின், 2-ம் மண்டல பாசனத்துக்கு பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில், அணையில் இருந்து 125 கிமீ நீள பிரதான கால்வாயில் பல இடங்களில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கின்றன. இதனால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்படும் என்பதால், புதர்களை அகற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் தீபாலபட்டி உள்ளிட்ட இடங்களில் கால்வாயில் ஆய்வு மேற்கொண்டனர். இப்பகுதிகளில் செடி, கொடிகள் வெட்டி அகற்றும் பணிகள் துவங்கி உள்ளன. தண்ணீர் திறப்புக்கு முன்னதாக கால்வாய் சீரமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 2-ம் மண்டல பாசனத்தில் மொத்தம் 74 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுவது குறிப்பிடத்தக்கது. திருமூர்த்தி அணையில் நேற்று நீர்மட்டம் 28.74 அடியாக இருந்தது. 29 கனஅடி நீர்வரத்தும், வெளியேற்றம் 27 கனஅடியாகவும் இருந்தது.

Related Stories: