×

நாளை ஆடிப்பூர தேரோட்டம்: ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு ஸ்ரீரங்கத்தில் இருந்து சீர்வரிசை பொருட்கள்

திருச்சி: ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் நாளை நடப்பதையொட்டி ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து வஸ்திரங்கள் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் எடுத்து செல்லப்பட்டது. திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சித்திரை தேரோட்ட நாளில் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயிலில் இருந்து மங்கல பொருட்கள் கொண்டு வரப்பட்டு பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. அதேபோல் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் பிறந்த நாளான ஆடிப்பூர தினத்தன்று நடைபெறும் தேரோட்டத்தின்போது ஆண்டாள் ஸ்ரீரெங்கமன்னார், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சூடிய மாலையை அணிந்து கொள்வார்.

அதன்படி ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் நாளை (1ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி நேற்று ஸ்ரீரங்கத்தில் இருந்து பட்டு வஸ்திரங்கள், மாலை, மஞ்சள், குங்குமம், வளையல்கள், பழங்கள் உள்ளிட்ட மங்கல பொருட்கள் ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள ரங்கவிலாச மண்டபத்தில் பக்தர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.

அதன்பின்னர் ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் கோயில் அர்ச்சகர்கள் மங்கல பொருட்களை கையில் ஏந்தியவாறு மேளம் தாளம் முழங்க யானையுடன் ஊர்வலமாக ரங்கா, ரங்கா கோபுரம் வரை எடுத்து வந்தனர். ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு இன்று மங்கல பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த வஸ்திரங்களை ஆண்டாள் அணிந்து நாளை தேரோட்டத்தில் தேரில் எழுந்தருளுவார்.



Tags : Andal Temple ,Srirangam , Aadipura Chariot Tomorrow: Items in procession from rangam to Srivilliputtur Andal Temple
× RELATED குழந்தை வரம் தரும் க்ஷேத்ர பாலகர்