கட்டுக்கட்டுக்காக பணம் எடுத்து சென்ற ஜார்கண்ட் 3 காங். எம்எல்ஏக்கள் கைது: மேற்குவங்க போலீசார் அதிரடி

கொல்கத்தா: ஜார்கண்ட் எம்எல்ஏக்கள் 3 பேர் மேற்குவங்கத்திற்கு கட்டுக் கட்டாக பணம் எடுத்து சென்றதால், அவர்கள் மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். மேற்குவங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்திற்கு ஜார்க்கண்ட் காங்கிரஸ்  எம்எல்ஏக்கள் இர்பான் அன்சாரி, ராஜேஷ் கச்சாப், நமன் பிக்சல் கொம்காரி  ஆகியோர் சென்றனர். பஞ்ச்லா காவல் நிலையப் பகுதியில் உள்ள ராணிஹாட்டி என்ற  இடத்தில் அவர்களின் காரை நேற்றிரவு மடக்கிய மேற்குவங்க போலீசார் அந்த காரை  சோதனையிட்டனர்.

அப்போது அந்த காரில் பல லட்சம் ரூபாய் கட்டுக்கட்டாக  இருந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதையடுத்து 3 எம்எல்ஏக்கள்  மற்றும் அவர்களின் காரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து  ஹவுரா காவல் கண்காணிப்பாளர் ஸ்வாதி பங்காலியா கூறுகையில், ‘3 எம்எல்ஏக்கள்  சென்ற காரில் அதிக அளவு பணம் கடத்தப்படுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.  அதையடுத்து அந்த மூன்று வாகனங்களையும் மடக்கி பரிசோதித்தோம்.

அந்த  வாகனத்தில் ஏராளமான பணம் சிக்கியது. மொத்தத் தொகையைக் கண்டறிய பணம் எண்ணும்  இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மூன்று எம்எல்ஏக்களும் எடுத்து வந்த  பணத்திற்கான ஆதாரம் மற்றும் அது எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது  குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. 3 எம்எல்ஏக்கள், அவர்களது உதவியாளர்கள், டிரைவர்களை தடுத்து வைத்துள்ளோம்’ என்றார். ஏற்கனவே மேற்குவங்க ஆசிரியர் பணி நியமன ஊழல் தொடர்பாக அம்மாநில திரிணாமுல்  மூத்த தலைவரும், பதவி பறிபோன அமைச்சருமான பார்த்தா சாட்டர்ஜி மற்றும் உதவியாளரும் நடிகையுமான  அர்பிதா முகர்ஜி ஆகியோர் சமீபத்தில் அமலாக்கத்துறையால் கைது  செய்யப்பட்டனர். நடிகையின் குடியிருப்பில் இருந்து சுமார் 50 கோடி ரூபாய்  மீட்கப்பட்டது. இந்த நிலையில் ஜார்கண்ட் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மேற்குவங்கத்தில் பணத்துடன் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: