முதல்வர் பெயரையே மாற்றி சொன்ன பாஜக மாஜி அமைச்சரின் ‘டங்க் சிலிப்’: மத்திய பிரதேசத்தில் பரபரப்பு

குவாலியர்: மத்திய பிரதேச மாநில முதல்வரின் பெயரையே மாற்றிச் சென்ன பாஜக முன்னாள் அமைச்சர், தனது நாக்கு நழுவிட்டதாக பின்னர் தெரிவித்தார். மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தீவிர ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் இமார்தி தேவி பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவர் சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிப் பெற்ற பாஜகவினருக்காக நடத்தப்பட்ட விழாவில் பங்கேற்றார்.

குவாலியர் அடுத்த டப்ராவில் பேசும்போது, ஜோதிராதித்ய சிந்தியாவின் தீவிர எதிர்ப்பாளரான மற்றொரு ஒன்றிய அமைச்சர் நரேந்திர சிங் தோமரை மாநில முதல்வர் (மத்திய பிரதேச முதல்வராக இருப்பவர் சிவராஜ் சிங் சவுகான்) என்று குறிப்பிட்டு பேசினார். அதாவது ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் முதல்வர் நரேந்திர சிங் தோமரால்தான் உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்ற முடிந்தது என்று கூறினார்.

இவரது இந்த வீடியோ தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தான் தவறாக கூறியதை உணர்ந்த இமார்தி தேவி, பின்னர் அளித்த பேட்டியில், ‘வெற்றிக் களிப்பில் பேசும் போது, எனது நாக்கு நழுவிவிட்டது (டங்க் சிலிப்)’ என்றார். இதேபோல் பல முறை சர்ச்சைக்குரிய வகையில் பேசும் இமார்தி தேவி, பின்னர் அதற்காக மன்னிப்பு கோருவதும், நாக்கு நழுவி விட்டது என்பதும் வாடிக்கையாகி விட்டதாக கட்சினர் தெரிவித்தனர்.

Related Stories: