அமலாக்கத்துறைக்கு பயந்து எம்எல்ஏக்கள் ஓட்டம்; என்னை கைது செய்தாலும் சிவசேனா உடையாது!: மூத்த எம்பி சஞ்சய் ராவத் பரபரப்பு பேட்டி

மும்பை: அமலாக்கத்துறைக்கு பயந்து எம்எல்ஏக்கள் சிலர் ஓடிவிட்டனர். என்னை கைது செய்தாலும் சிவசேனா உடையாது என்று அக்கட்சியின் மூத்த எம்பி சஞ்சய் ராவத் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்கள் மற்றும் பாஜகவுடன் இணைந்து ஆட்சி நடத்தி வருகிறார். சிவசேனா கட்சி இரண்டாக பிளவுபடுவதற்கு முக்கிய காரணம், அக்கட்சியின் மூத்த எம்பி சஞ்சய் ராவத் என்று அதிருப்தி தலைவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் சஞ்சய் ராவத் மீது அமலாக்கத்துறை வழக்குபதிந்துள்ளதால், அவர் தொடர்ந்து ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

இந்நிலையில் அவர் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘அமலாக்கத்துறையின் விசாரணையில் அரசியல் உள்ளது. நான் அமலாக்கத்துறையை மதிக்கிறேன்; இரண்டு முறை ஆஜராகிவிட்டேன்; என்னை மீண்டும் அழைத்தால், மீண்டும் செல்வேன். நான் கட்சியில் இருப்பதை அவர்கள் (ஏக்நாத் மற்றும் ஆதரவாளர்கள்) விரும்பவில்லை. நேற்று வரை ஒன்றாக இருந்துவிட்டு, தற்போது ஓடிவிட்டனர். அவர்கள் எல்லோரும் ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளுக்கு பயந்து ஓடிவிட்டனர். சிவசேனா கட்சியை உடைக்க முயற்சி நடக்கிறது. என்னைக் கைது செய்தாலும் சிவசேனா கட்சி உடையாது. எங்கள் கட்சி வலுவாக இருக்கும்.

இவர்கள் ஆடும் ஆட்டத்தை மகாராஷ்டிரா மக்கள் பார்த்துக் கொண்டுள்ளனர். 40 எம்எல்ஏக்களின் ஆதரவை கொண்டவரை முதல்வர் (ஏக்நாத்) ஆக்கினார்கள். ஆனால் 2019ல் நடந்த தேர்தல் வாக்குறுதிபடி எங்களுக்கு முதல்வர் பதவி கொடுத்திருந்தால், இத்தனை பிரச்னை ஏற்பட்டிருக்காது. ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை. டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் என்று எல்லா இடங்களும் உங்களுக்கு வேண்டுமானால், மாநில கட்சிகள் என்ன செய்ய வேண்டும்? எங்களது மகா விகாஸ் அகாடி கூட்டணி தொடரும். ஏக்நாத் ஷிண்டேவுக்கு என்னுடைய சவால் என்னவென்றால், தனியாக கட்சி உருவாக்கி அதன் மூலம் தேர்தலில் போட்டியிட வேண்டும்.

பதவிப்பிரமாணம் ஏற்று ஒரு மாதமாகியும் அவர்களால் அமைச்சரவையை அமைக்க முடியவில்லை. இந்த அரசு செயல்படாத அரசாகதான் இருக்கும். தேவேந்திர பட்னாவிஸ் (துணை முதல்வர்) மீது எங்களுக்கு அனுதாபம் உள்ளது. அவர் முதல்வராகி இருக்க வேண்டும். அவர் துணை முதல்வராக பதவியேற்றதை பார்த்து நாங்கள் வருத்தப்பட்டோம்’ என்றார்.

Related Stories: