காதல் மனைவி குத்திக்கொலை?: கோனே அருவிக்கு மீண்டும் அழைத்து சென்று கணவரிடம் விசாரிக்க முடிவு

புழல்:காதல் மனைவி குத்திவிட்டு தப்பிச்சென்ற கணவரை கைது செய்துள்ள போலீசார், அவரை சம்பவம் நடந்த கோனோ  அருவிக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகர் 8வது தெருவை சேர்ந்தவர் மதன் (19). இவர் ஆட்டோ டிரைவர். இவரும் புழல் அருகே கதிர்வேடு ஜான்விக்டர் தெருவை சேர்ந்த தமிழ்ச்செல்வி(19) என்பவரும் பல வருடங்களாக காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 25ம் தேதி திடீரென தமிழ்ச்செல்வி மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், தமிழ்ச்செல்வியின் செல்போனுக்குதொடர்புகொண்டபோது போன் சுவீட்ச் ஆப்  செய்யப்பட்டிருந்தது. மதனை பற்றி விசாரித்தபோதும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்கு சென்று விசாரித்தபோது தமிழ்ச்செல்வியை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதுசம்பந்தமாக கடந்த ஜூன் 30ம் தமிழ்ச்செல்வின் பெற்றோர், செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன்படி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தில் உள்ள கோனே அருவிக்கு மதனும் தமிழ்ச்செல்வியும் குளிக்க சென்றிருப்பது தெரியவந்தது. இதன் அடிப்படையில், மதனை போலீசார் தீவிரமாக தேடி  வந்தனர். இந்த நிலையில், கோனே அருவிக்கு செல்லும் பாதையில் வனத்துறையினர் வைத்துள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது மதனும் தமிழ்செல்வியும் செல்வது பதிவாகியிருந்தது. பின்னர் மதன் மட்டும் திரும்பி வருவது பதிவாகி இருந்தது.

இதன்அடிப்படையில், விசாரணை நடத்திவந்த போலீசார், மதனை கைது செய்தனர். பின்னர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, அவர் கோனே அருவில் வைத்து தமிழ்ச்செல்வியை கத்தியால் குத்திவிட்டு ஓடிவந்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து அருவி பகுதியில் தேடியபோது தமிழ்ச்செல்வியை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஆழமான பகுதியில் விழுந்து இறந்துவிட்டாரா என போலீசாரும் வனத்துறையினரும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், மதனை பாடியநல்லூர் பகுதிக்கு அழைத்துவந்து விசாரணை நடத்தினர். இன்று மதனை மீண்டும் கோனா அருவி பகுதிக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்துகின்றனர். இதன்பிறகு இந்த சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என்று தெரிகிறது.இதனிடையே தமிழ்ச்செல்வியின் தாய், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

Related Stories: