திருப்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் எரியாத ஹைமாஸ் விளக்கால் அடிக்கடி நடக்கும் விபத்துகள்

திருப்புத்தூர்: திருப்புத்தூர் வழியாக செல்லும் தஞ்சாவூர்-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் என்.புதூர்-திருப்புத்தூர் ரோடு சந்திப்பு சில்லாம்பட்டி விலக்கு அருகே உள்ள ஹைமாஸ் விளக்கு எரியாததால் அப்பகுதியில் இருளில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். தஞ்சாவூர்-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை திருப்புத்தூர் வழியாக செல்கிறது. முன்பு இந்த பகுதிகளில் செல்லும் அனைத்து வாகனங்களும் திருப்புத்தூர் ஊருக்குள் வந்துதான் செல்லும்.

தற்போது இந்த தேசிய நெடுஞ்சாலை போடப்பட்டுள்ளதால், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருமயம், மானாமதுரை, சிவகங்கை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் கார்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் அனைத்தும் இந்த சாலை வழியாகதான் செல்கிறது.

இந்த சாலைகளில் விளக்குகள் இல்லாததால் ரோடு முழுவதும் இருட்டாகவே இருந்தது. பின்னர் என்.புதூர்-திருப்புத்தூர் இணைப்பு ரோடு அருகேயும், திருப்புத்தூர் தம்பிபட்டி மற்றும் வனத்துறை அருகே இணைப்பு ரோடு உள்ளிட்ட சில இடங்களில் ஹைமாஸ் விளக்குகள் போடப்பட்டது. பின்னர் பல மாதங்களுக்கு பிறகு மின் இணைப்பு கொடுக்கப்பட்டு விளக்கு எரிந்தது. தற்போது என்.புதூர் பகுதியில் சில்லாம்பட்டி விலக்கு ரோடு அருகே உள்ள ஹைமாஸ் விளக்கு கடந்த பல வாரங்களாக எரியவில்லை.

இதனால் நெடுஞ்சாலைகளில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள், இருள் சூழ்ந்துள்ளதாலும், என்.புதூர் பகுதியிலிருந்து நெடுஞ்சாலையில் இணையும் ரோடுகள் சந்திப்புகள் இருப்பதாலும் திடீரென வாகனங்கள் இந்த சந்திப்புகளில் வரும் பொழுது நிலை தடுமாறி விபத்துகள் ஏற்படுகிறது.  இதுபோன்ற விபத்துகளை தவிர்க்க, பழுதாகி எரியாமல் உள்ள ஹைமாஸ் விளக்கை உடனடியாக சரி செய்ய சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: