எகிறும் உரம் விலை; குறையும் வேலையாட்களால் மதுரையில் மாறி போனது விவசாய முறை

அலங்காநல்லூர்: உரம் விலை உயர்வு, வேலையாட்கள் திண்டாட்டம், அதிக கூலி போன்ற காரணங்களால் மதுரை மாவட்டத்தில் மாற்று விவசாய முறைகளை விவசாயிகள் கையாண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் வைகை, பெரியாறு அணைகளின் மூலமே இருபோக விவசாயம் நடந்து வருகிறது. இதனை நம்பி பல்லாயிரக்கணக்கானோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வாழ்வாதாரம் காத்து வருகின்றனர். ஆனால் தற்போது மாவட்டத்தில் விவசாய வளர்ச்சி என்பது கேள்விக்குறியாகி உள்ளது. குறிப்பாக நெல் விவசாயம். இதற்கு உயர்ந்து வரும் உரம் விலை, வேலையாட்கள் பற்றாக்குறை, விவசாய கூலி உயர்வு ஆகியவை முக்கிய காரணங்களாக உள்ளன. தற்போது தேவையான அளவு தண்ணீர் இருந்தும் விவசாயத்தை கைவிடும் சூழ்நிலையில் விவசாயிகள் தத்தளித்து வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் மேலூர், திருமங்கலம், வாடிப்பட்டி தாலுகா பகுதிகளில் அமோகமாக நடந்து வந்த நெல் விவசாயம் தற்ேபாது மாற்று முறை விவசாயத்தை நோக்கி விவசாயிகள் பயணிக்கும் அவலநிலை உள்ளது.

ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்காலங்களில் மட்டுமே விவசாயம் செய்வர். தொடர் மழை பெய்யும் நேரத்தில் நிலத்தை உழுது தயார் நிலையில் வைத்திருப்பர். அடுத்து வரும் மழைக்காலத்தில் மானாவாரியாக நெல், கம்பு, சோளம், மக்காச்சோளம், மிளகாய், துவரை, பாசிப்பயறு, உளுந்து உள்ளிட்டவற்றை விதைப்பது வழக்கத்தில் இருந்து வருகிறது. அதேபோல் இவ்வழக்கம், தற்ேபாது மதுரை மாவட்டத்திற்கும் வந்துள்ளது. தொன்று விட்டு நடந்து வந்த நெல் நடவு பணிகள் கடந்த சில ஆண்டுகளாக கைவிடப்பட்டு நேரடி நெல் விதைப்புக்கு விவசாயிகள் மாறி வருகின்றனர். மேலும் உரம் விலை உயர்வால், இயற்கை செடி வகை தாவரங்களை நிலங்களில் விதைத்து வளர செய்து, அவற்றை உழுது மக்க செய்து உரமாக்கிய பின்னர் விவசாயத்தை மேற்கொள்ளும் சூழ்நிலை மதுரை மாவட்ட விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் புதுப்பட்டி செனமேஸ்வரன், பிள்ளையார்நத்தம் ராமகிருஷ்ணன் ஆகியோர் கூறியதாவது: வைகை பெரியாறு பாசனத்திற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு பின் தற்போது ஜூன் மாதத்தில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. எனினும் ரசாயன உர விலை உயர்வு, வேலையாட்கள் பற்றாக்குறை, விவசாய கூலி ஆட்களின் சம்பள உயர்வு போன்றவற்றால் விவசாயத்தை தொடர்ந்து செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு ஏக்கர் நடவு செய்வதற்கு முந்தைய காலத்தில் குறைந்தபட்சம் ரூ. 5 ஆயிரம் இருந்தால் போதும். ஆனால் தற்போது நெல் நடவு செய்வதற்கு மட்டுமே ரூ.5 ஆயிரம் தேவைப்படுகிறது. இதைவிட உழவு, வரப்பு வெட்டுதல், பரம்பு அடித்தல், உள்ளிட்ட பல்வேறு செலவுகள் காரணமாக விவசாய செலவு பன்மடங்கு உயர்ந்துள்ளது. நடவு முதல் அறுவடை வரைக்கும் மட்டும் ஒரு ஏக்கருக்கு குறைந்தது ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவாகிறது. ஆனால் ஒரு ஏக்கரில் இருந்து கிடைக்கக்கூடிய வருவாயே ரூ.30 ஆயிரத்திற்கும் குறைவுதான். இதனாலே தற்போது மாற்று முறை விவசாயத்தை மேற்கொண்டு அதன் மூலம் லாபம் கிடைக்குமா? என பல்வேறு விதமான நடைமுறைகளை பின்பற்றி வருகிறோம். அதாவது நடவு செய்வதை தவிர்த்து நேரடி நெல் விதைப்பு செய்து வருகிறோம்.

ரசாயன உரங்களை பயன்படுத்துவதை தவிர்த்து இயற்கை தாவரங்கள் வயல்களில் விதைத்து முளைக்க செய்து அதனை உழுது விவசாயம் செய்து வருவதால் ஓரளவு விவசாய செலவு கட்டுக்குள் வைக்க முடிகிறது. அதேபோல் நெல்லுக்கான கொள்முதல் விலையை அரசு உயர்த்த வேண்டும். வருங்காலத்தில் நெல்லை தவிர்த்து மாற்று முறை விவசாயத்தை செய்வதற்கு அரசின் வேளாண்மை துறை வழிகாட்ட வேண்டும். தென்மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை தொடர்ந்து இயங்கினால் நெல் விவசாயத்துடன், கரும்பு உள்ளிட்ட மாற்று பயிர் செய்வதற்கு விவசாயிகள் தயாராக உள்ளனர்.

இவ்வாறு கூறினர்.

Related Stories: