கோனே அருவிக்கு அழைத்து சென்று கத்தியால் குத்தி காதல் மனைவி கொலை? ஒரு மாதமாக தேடும் போலீசார்; தப்பிவந்த கணவனிடம் விசாரணை

சென்னை: கோனே அருவி மலைக்கு அழைத்துச் சென்ற காதல் மனைவியை கணவனே கத்தியால் குத்திவிட்டு அப்படியே விட்டுவிட்டு வந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது, தொடர்பாக அவரது கணவரிடம் போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர். செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகர் 8வது தெருவைச் சேர்ந்தவர் மதன் (19). ஆட்டோ டிரைவர். புழல் அடுத்த கதிர்வேடு ஜான்விக்டர் தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் - பல்கிஸ் தம்பதியின் மகள் தமிழ்ச்செல்வி (19). இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்ததில் இருந்தே கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது.   

இதற்கிடையே, தமிழ்ச்செல்வியின் தாய் பல்கிஸ் (48), தனது மகளிடம் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார். கடந்த ஜூன் 23ம் தேதி முதல் மகள் தமிழ்ச்செல்வி செல்போன் அழைப்பை எடுக்கவில்லை. இதனால் தமிழ்செல்வியின் தாய் பலமுறை தமிழ்செல்விக்கு போன் செய்துள்ளார். பின்னர், போனை எடுத்த மருமகன் மதன் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளார். மேலும் அவர் போதையில் உளறுவது தமிழ்செல்வியின் தாய்க்கு தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த பல்கிஸ் மருமகன் மதனின் வீட்டுக்கு சென்று பார்த்தார். அங்கு மகள் இல்லை. இதனால் உறவினர்கள் வீடுகளிடமும் மகளை தேடினார். தமிழ்ச்செல்வி குறித்து எந்த தகவலுக்கும் கிடைக்கவில்லை. எனவே அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து  செங்குன்றம் காவல் நிலையத்தில் பல்கிஸ் புகார் செய்தார்.  உதவி கமிஷனர் முருகேசன், இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் மதனை பிடித்தனர். விசாரணையில், காதல் மனைவி தமிழ்ச்செல்வியை  அழைத்துக் கொண்டு கடந்த 26ம் தேதி ஆந்திர மாநில எல்லையில் உள்ள  சுற்றுலாத்தலமான கோனே அருவி மலைப்பகுதிக்கு மதன் சென்றுள்ளார். அங்கு தம்பதி இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மதன், கத்தியை எடுத்து மனைவியை சரமாரியாக குத்தியுள்ளார். படுகாயத்துடன் சரிந்து விழுந்த தமிழ்செல்வியை அங்குள்ள புதர் பகுதியிலேயே விட்டு விட்டு வந்துவிட்டதாக சாகவாசமாக தெரிவித்தார்.இதை கேட்டதும் போலீசார் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக மனதை அழைத்துக் கொண்டு கோனே நீர் வீழ்ச்சிக்கு சென்றனர். மதன் தனது மனைவியை கத்தியால் குத்திய இடத்தை அடையாளம் காட்டினார். அந்த பகுதியில் 10க்கும் மேற்பட்ட போலீசார் தமிழ்ச்செல்வியை தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது உடலும் கிடைக்கவில்லை. அந்த பகுதி சிசிடிவி காட்சியை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் தமிழ்ச்செல்வியை அழைத்துக் கொண்டு மதன் வந்தது தெரியவந்தது. பின்னர் 5 மணி நேரம்  கழித்து மதன் மட்டும் தனியாக சென்றதும் சிசிடிவி காட்சியில்  பதிவாகி இருந்தது.

சம்பவம் நடந்து சுமார் ஒரு மாதத்துக்கும் மேல் ஆகிறது. எனவே, செங்குன்றம்  போலீசார் சித்தூர் போலீசார் உதவியை நாடினர்.  தமிழ்ச்செல்வி அருவியின் அருகில் உள்ள முட்புதரில் சிக்கியுள்ளாரா அல்லது வேறு என்ன ஆனார் என்பது தெரியாமல் இரண்டு மாநில போலீசாரும் தீவிரமாக தேடுகின்றனர். இதுதொடர்பாக மதனின் நண்பர்களான பந்தா, சந்தோஷ் ஆகிய இருவரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். மேலும், தமிழ்ச்செல்வியின்  தாய் பல்கிஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில்  தனது மகளை கண்டுபிடித்து தரும்படி ஆட்கொணர்வு மனு ஒன்றும் தாக்கல் செய்துள்ளார்.

* போதை பழக்கத்தால் பணம் கேட்டு சித்ரவதை

மதனுக்கு குடி மற்றும் போதைப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வீட்டில் சென்று பணம் வாங்கி வரும்படி மனைவியை சித்ரவதை செய்துள்ளார். இதனால் தம்பதிக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும் மதன் போதைப் பழக்கம் உடையவர் என்பதால் சரியாக வேலைக்கு செல்வதில்லையாம். தொடர்ந்து, பணம் கேட்டு தமிழ்ச்செல்வியை தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகுதான் கோனே நீர்வீழ்ச்சிக்கு அழைத்துச்சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் தகராறு ஏற்படவே கத்தியால் சரமாரி குத்திவிட்டு, அங்கேயே விட்டுவிட்டு செங்குன்றத்திற்கு வந்துள்ளார்.

Related Stories: