×

மால்டோவாவை வீழ்த்தியது இந்தியா: 6 அணிகளும் அமர்க்களம்

சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடரின் ஓபன் பிரிவு 2வது சுற்றில் மால்டோவா அணியுடன் நேற்று மோதிய இந்தியா 3.5-0.5 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. ஓபன் மற்றும் மகளிர் பிரிவில் இந்தியாவின் 6 அணிகளும் நேற்று
மாமல்லபுரத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் இந்திய அணி வீரர்கள் ஹரிகிருஷ்ணா பென்டாலா, எஸ்.எல்.நாராயணன், சசிகிரண் கிருஷ்ணன் ஆகியோர் மால்டோவா வீரர்களுக்கு எதிராக வெற்றியை பதிவு செய்து தலா 1 புள்ளி பெற்றனர். இந்திய வீரர் எரிகைசி அர்ஜுன் - மகோவெய் ஆந்த்ரே (மால்டோவா) மோதிய ஆட்டம் டிராவில் முடிந்ததால் இருவரும் தலா அரை புள்ளி பெற்றனர்.

மற்றொரு 2வது சுற்றில் இந்தியா-2 அணி எஸ்டோனியாவை எதிர்கொண்டது. அதில் இந்திய வீரர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா, அதிபன் போஸ் சத்வானி ரவுனக் ஆகியோர் அபாரமாக விளையாடி 4-0 என்ற கணக்கில் முழுமையான வெற்றியை வசப்படுத்தினர். மெக்சிகோ - இந்தியா-3 அணிகள் மோதிய ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது. இந்த போட்டியில் இந்தியாவின் சூரிய சேகர் கங்குலி, எஸ்.பி.சேதுராமன், அபிஜீத் குப்தா ஆகியோர் டிரா செய்து தலா 1/2 புள்ளி மட்டுமே பெற்ற நிலையில், மெக்சிகோவின் கபோ விடால் உரியலுடன் மோதிய கார்த்திகேயன் முரளி அபாரமாக செயல்பட்டு வெற்றி பெற்றார். இந்த போட்டியில் இந்தியா 2.5 - 1.5 என்ற புள்ளிக் கணக்கில் எஸ்டோனியாவை வீழ்த்தியது.

மகளிர் அணிகள் அசத்தல்: செஸ் ஒலிம்பியாடில் நேற்று களமிறங்கிய 3 இந்திய மகளிர் அணிகளும் வெற்றியை பதிவு செய்தன. இந்தியா - அர்ஜென்டினா அணிகள் மோதிய போட்டியில் இந்தியா 3.5-0.5 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வென்றது. இப்போட்டியில் இந்திய வீராங்கனைகள் வைஷாலி, டானியா சச்தேவ், குல்கர்னி பக்தி ஆகியோர் வெற்றிகளைக் குவித்த நிலையில், கொனேரு ஹம்பி - ஜுரியல் மரிசா (அர்ஜென்டினா) மோதிய ஆட்டம் டிராவில் முடிந்ததை அடுத்து இரு வீராங்கனைகளும் தலா அரை புள்ளி பெற்றனர்.

மற்றொரு மகளிர் 2வது சுற்றில் இந்தியா-2 அணி 3.5-0.5 என்ற புள்ளிக் கணக்கில் லாத்வியாவை வீழ்த்தியது. இந்த போட்டியில் வந்திகா அகர்வால், சவும்யா சுவாமிநாதன், மேரி ஆன் கோம்ஸ் வெற்றி பெற்ற நிலையில், பத்மினி ராவுத் - பெர்ஸின இல்ஸி மோதிய ஆட்டம் டிரா ஆனது. சிங்கப்பூர் அணியுடன் மோதிய இந்தியா-3 அணி 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. இப்போட்டியில் ஈஷா கர்வாடே, பி.வி.நந்திதா வெற்றியை பதிவு செய்ய, பிரத்யுஷா மற்றும் விஷ்வா வஸ்னவாலா டிரா செய்தனர்.

* ஒலிம்பியாடில் கலக்கும் 8 வயசு பொடிசு!
44வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்கும் பாலஸ்தீன அணியில் இடம் பெற்றுள்ள 8 வயது சிறுமி ராண்டா செடர் நேற்று கொமோராஸ் அணியின் பாஹிமா அலி முகமதுவுடம் மோதினார். இந்த போட்டியில் அபாரமாக விளையாடி வென்ற ராண்டா 1 புள்ளியை பெற்று அசத்தினார். மகளிர் பிரிவில் நடந்த இந்த போட்டியில் பாலஸ்தீனம் 4-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றது. நடப்பு செஸ் ஒலிம்பியாடில் பங்கேற்றுள்ள மிக இளம் வயது வீராங்கனை என்ற பெருமை ராண்டாவுக்கு கிடைத்துள்ளது.

Tags : India ,Moldova , India beat Moldova: All 6 teams qualify
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்தாலோசனை...