கொந்தகை தளத்தில் கிடைத்த முதுமக்கள் தாழியில் மண்டை ஓடு கண்டெடுப்பு: அமெரிக்க பல்கலை. குழு சோதனை

திருப்புவனம்: கொந்தகை தளத்தில் கிடைத்த முதுமக்கள் தாழிகளில் மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை ஆய்வு செய்ய முதன்முறையாக அமெரிக்க பல்கலைக்கழக நிபுணர்கள் குழு களமிறங்கியுள்ளது. தமிழக தொல்லியல் துறை சார்பில் சிவகங்கை மாவட்டம், கீழடி, அகரம், கொந்தகையில் குழிகள் தோண்டப்பட்டு 800க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன. கொந்தகை தளத்தில் 4 குழிகளில் இருந்து 54 முதுமக்கள் தாழிகள் வெளிப்பட்டுள்ளன. இதில் ஒரு சில முதுமக்கள் தாழிகள் தவிர மற்றவை சேதமடைந்துள்ளன. சேதமடையாத தாழிகளை கணக்கிட்டு அதனை திறக்க தொல்லியல் துறை முடிவு செய்தது. நிபுணர்கள் முன் முதுமக்கள் தாழி திறக்கப்பட்டது. மூன்றரை அடி உயர தாழியின் மேற்பகுதி திறக்கப்பட்டு மண்டை ஓடு, கை, கால் எலும்புகள், உணவு குவளை, தண்ணீர் குவளை உள்ளிட்ட 20 பொருட்கள் வெளியே எடுக்கப்பட்டன. அமெரிக்கா ஹார்வர்டு பல்கலைகழக பேராசிரியர் டேவிட், சிகாகோ பல்கலைகழக பேராசிரியை மானஸா உள்ளிட்டோரின் நேரடி கண்காணிப்பில் ஆய்வு பணிகள் நடந்து வருகின்றன். முதுமக்கள் தாழிகளை திறந்து பொருட்களை வெளியே எடுக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

* நீதிபதிகள் பாராட்டு

கீழடி அகழாய்வு பணிகள் மற்றும் அருங்காட்சியகத்தை ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் பிரகாஷ், சுந்தர், சந்திரசேகர், சிவஞானம், நிர்மல்குமார், ஹேமலதா, தாரணி, ஜெயகுமார், ஸ்ரீமதி ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். அகழாய்வு பணிகள் குறித்து திருப்தி தெரிவித்த நீதிபதிகள், தொல்லியல் துணை ஆணையர் சிவானந்தத்தை பாராட்டி சால்வை அணிவித்தனர். பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களையும் பாராட்டியதுடன், அவர்களது பெயர்களையும் கல்வெட்டில் வைக்கும்படி அதிகாரிகளுக்கு யோசனை தெரிவித்தனர்.

Related Stories: