×

குரங்கம்மை குறித்து வதந்தி பரப்ப வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்

சென்னை: குரங்கம்மை குறித்த வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் ரோட்டரி கிளப் சார்பில் மகளிருக்கான ஆரம்ப நிலை புற்றுநோய் கண்டறியும் சிறப்பு முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று  தொடங்கி வைத்தார். இதில் துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: மகளிருக்கு ஆரம்ப நிலை புற்றுநோயை கண்டறியும் வகையில் இந்த முகாம் நடக்கிறது. காஞ்சிபுரத்தில் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. முதல்வர், பதவியேற்ற பின் புற்றுநோய்க்காக சிறப்பான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஓராண்டில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் திறக்கப்பட உள்ளது. தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு இல்லை.

எந்த நோய் பாதிப்பு ஏற்பட்டாலும் உடனடியாக அறிவிக்கப்படும். நோய் குறித்து அறிவிப்பு மக்களுக்கு தெரிவித்தால்தான் விழிப்புணர்வோடு இருப்பார்கள். குரங்கம்மை குறித்த வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம். 77 நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு உள்ளது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை விமான நிலையங்களில் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. சென்னை, மதுரை, கோவை, திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 10 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 15 இடங்களில் 30 வயதை கடந்த மகளிருக்கு ஆரம்ப நிலை புற்றுநோய் கண்டறியும் முகாம் தொடங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Kurangammai ,Minister ,M. Subramanian , Don't spread rumors about Kurangammai: Minister M. Subramanian appeals
× RELATED தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து...