×

நெல்லுக்கு அடி உரமாக டிஏபி உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் உரங்களை பயன்படுத்த வேண்டும்: விவசாயிகளுக்கு அமைச்சர் வேண்டுகோள்

சென்னை: வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் பெரும்பாலும் டிஏபி உரத்தையே அடி உரமாக பயன்படுத்துகிறார்கள். டிஏபி உரம் தயாரிப்புக்கு தேவைப்படும் மூலப்பொருளான பாஸ்பாரிக் அமிலத்தின் விலை உலக அளவில் அதிகரித்துக்கொண்டே செல்வதால், உள்நாட்டில் டிஏபி உர உற்பத்தி குறைந்து, பெரும்பாலான டிஏபி உரங்கள் வெளிநாட்டில் இருந்தே இறக்குமதி செய்து, விவசாயிகளுக்கு மானியத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இறக்குமதியின்போது சில நேரங்களில் கப்பல் பற்றாக்குறை அல்லது துறைமுகங்களில் இட நெருக்கடி போன்ற காரணங்களினால் டிஏபி உரத்தை துறைமுகத்தில் இறக்கி, மாவட்டங்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, இது தொடர்பாக, ஒன்றிய அரசின் உரத்துறையானது, டிஏபி  உரத்துக்கு மாற்றாக, காம்ப்ளக்ஸ் மற்றும் சூப்பர் பாஸ்பேட் உரங்களை அடி உரமாக இட விவசாயிகளுக்கு அறிவுரை வழங்குமாறு அனைத்து மாநிலங்களையும் வலியுறுத்தி வருகிறது.  

அதன்படி, 9 கிலோ தழைச்சத்தும் 23 கிலோ மணிச்சத்தும் உள்ள 50 கிலோ டிஏபி உரத்திற்கு மாற்றாக, அடி உரமாக, காம்ப்ளக்ஸ் மற்றும் சூப்பர் பாஸ்பேட் உரங்களை பயன்படுத்தலாம் என்று ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் காம்ப்ளெக்ஸ் உரமும், சூப்பர் பாஸ்பேட் உரமும் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. எனவே, டிஏபி உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை நெல்லுக்கு அடி உரமாக விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Minister , Superphosphate fertilizers should be used instead of DAP as base fertilizer for paddy: Minister appeals to farmers
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...