கிறிஸ் ராக்கிற்கு ‘பளார்’ விவகாரம் மீண்டும் மன்னிப்பு கேட்டார் வில் ஸ்மித்

லாஸ்ஏஞ்சல்ஸ்: கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்மனைவி குறித்து, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய மற்றொரு நடிகர் கிறிஸ் ராக் கிண்டலான சில கருத்துகளை தெரிவித்தார். இதனால் ஆவேசம் அடைந்த வில் ஸ்மித், மேடையில் கிறிஸ் ராக்கை யாரும் எதிர்பாராத வகையில் ‘பளார்’ என்று கன்னத்தில் அறைந்தார். இச்சம்பவம் உலகம் முழுவதும் நேரலை மூலமாக பார்க்கப்பட்டது. இதையடுத்து, விருது நிகழ்ச்சியில் நடந்த செயலுக்காக வில் ஸ்மித் மன்னிப்பு கேட்டார். இந்த விவகாரத்தை தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்கு ஆஸ்கர் தேர்வு குழுவில் கலந்து கொள்ள வில் ஸ்மித்துக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், அவரது மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அன்ட் சயின்சஸ் அகாடமி பதவிகளும் பறிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது வில் ஸ்மித் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘கிறிஸ் ராக்கை நான் பலமுறை தொடர்புகொள்ள முயற்சி செய்தேன். ஆனால், எனது எல்லா முயற்சிகளும் தோல்வி அடைந்தது. இதற்கு காரணம், அவர் என்னிடம் பேசத் தயாராக இல்லை. இதை நான் அவரது செயல்களில் இருந்து புரிந்துகொண்டேன். அவர் என்னிடம் பேசத் தயாரானதும், நான் அவரிடம் மன்னிப்பு  கேட்பேன். எனது நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது. நீங்கள் (கிறிஸ் ராக்) என்னுடன் பேசத் தயாராக இருக்கும்போது, நான் இங்குதான் இருப்பேன். கிறிஸ் ராக்கின் தாயிடமும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். அவர்களின் சமீபத்திய பேட்டியைப் பார்த்தேன். எங்களுக்குள் இருந்த குடும்ப உறவை சரிசெய்ய முடியுமா என்று தெரியவில்லை. அப்போது மேடையில் நடந்த சம்பவத்துக்கும், எனது மனைவிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று மிக உருக்கமாகப் பேசியிருக்கிறார்.

Related Stories: