துப்பாக்கி சுடும் போட்டியில் 6 பதக்கங்களை அள்ளிய அஜித்

திருச்சி: திருச்சியில் நடந்த மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில், நடிகர் அஜித் குமார் 4 தங்கம், 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார். திருச்சியில் 47வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி, திருச்சி மாநகர் கே.கே நகர் ஆயுதப்படை வளாகத்திலுள்ள திருச்சி ரைபிள் கிளப்பில் நடந்தது. பல்வேறு பிரிவுகளில் கடந்த 24ம் தேதி தொடங்கிய இப்போட்டி இன்றுடன் நிறைவடைகிறது. இந்தப் போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற 1,300 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். கடந்த 27ம் தேதி இப்போட்டியில் அஜித் குமார் மாஸ்டர் பிரிவில் பங்கேற் றார். 10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் என்று 3 சுடுதளத்திலும் பிஸ்டல் பிரிவு போட்டி களில் கலந்துகொண்ட அவர், அன்றே திருச்சியில் இருந்து சென்னை புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில், மாநில துப்பாக்கி சுடும் போட்டி பிஸ்டல் பிரிவுகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது. ஓய்வுபெற்ற டிஜிபி தேவாரம் பதக்கங்களை வழங்கினார். இதில் மொத்தம் 162 பேர் பதக்கங்களை வென்றனர். இதில் அஜித் குமார், சென்டர் பயர் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப்பதக்கமும், ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கமும், 50 மீட்டர் பிரீ பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப்பதக்கமும், ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி (ஐஎஸ்எஸ்எப்) பிரிவில் தங்கப்பதக்கமும், 50 மீட்டர் பிரீ பிஸ்டல் ஆண்கள் அணி பிரிவில் வெண்கலப் பதக்கமும், ஸ்டாண்டர்டு பிஸ்டல் ஆண்கள் அணி பிரிவில் வெண்கலப் பதக்கமும் என 4 தங்கம், 2 வெண்கலப் பதக்கம் என்று, மொத்தம் 6 பதக்கங்களை வென்றார். இத்தகவல் வைரலாகி வருகிறது.

Related Stories: