×

தேர்தலில் மட்டும் கூட்டணியாக இல்லாமல் கொள்கை கூட்டணியாக கம்யூனிஸ்ட்களுடன் தொடருவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தேர்தலில் மட்டும் கூட்டணியாக இல்லாமல், கம்யூனிஸ்ட்களுடன் கொள்கை கூட்டணியாக தொடருவோம் என முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று  காணொலிக் காட்சி வாயிலாக கேரள மாநிலம், திருச்சூரில் மலையாள நாளிதழ் சார்பில் நடந்த ‘இந்தியா 75’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் பங்கேற்றார்.

அப்போது நிருபர்களின் கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில்: எனக்கு கேரளாவில் ரசிகர்கள் இருப்பது போல ‘காம்ரேட்’ பினராயி விஜயனுக்கும் தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவர் முதலமைச்சராக செயல்பட்டு கொண்டு இருந்த நேரத்தில், தமிழ்நாட்டில் வேறு ஒரு கட்சியின் ஆட்சி இருந்தது. அது உங்களுக்கு தெரியும். அப்போது கேரள மாநிலத்தின் பினராயி விஜயன் போல ஒரு முதலமைச்சர் நமது மாநிலத்திற்கு இல்லையே என்று தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மக்கள் எல்லாம் ஒரு ஏக்கத்தோடு சொல்லிக் கொண்டு இருந்தார்கள்.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்தபோது, உள்ளபடியே சொல்கிறேன். என்னுடைய செயல்பாடுகளுக்கு, முன்னுதாரணமாக பினராயி விஜயனுடைய செயல்பாடுகளை தான் நான் கையில் எடுத்தேன். குறிப்பாக, கொரோனா தொற்று நோயை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்பதை முதலமைச்சர் பினராயி விஜயன் வழிகாட்டுதல்படி தான் அந்த பணியை நிறைவேற்றினேன் என்பது முக்கியம். எங்களுடைய இரு கட்சிகளுக்கும் இடையில் இருப்பது வெறும் தேர்தல் கூட்டணி மட்டுமல்ல. அது ஒரு கொள்கை கூட்டணி, லட்சியக் கூட்டணி. எனவே நாங்கள் இணக்கமாவே இருக்கிறோம். திமுக ஆட்சிக்கு தேவையான, ஆரோக்கியமான ஆலோசனைகளை சிபிஎம்.ஐ பொறுத்தவரையும் அக்கட்சியினுடைய தலைவர்கள் எங்களுக்கு அவ்வப்போது அறிக்கைகளாக கொடுக்கிறார்கள். தொலைபேசி மூலமாக எங்களுக்கு சொல்கிறார்கள். ஏன் நேரிலும் எங்களை பார்த்து இப்பிரச்னைகள் எல்லாம் இருக்கிறது, இப்படி செய்ய வேண்டும் என்று கருத்துகளை சொல்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல், நானும் சில விஷயங்களை அவர்களோடு நேரடியாக தொடர்பு கொண்டு செய்து கொண்டு இருக்கிறோம். அதையும் தாண்டி பல கருத்துகளை சிபிஎம் அதிகாரப்பூர்வமான பத்திரிகையான “தீக்கதிர்” பத்திரிகையில், அவ்வப்போது ஆட்சியில் இருக்கக்கூடிய சில குறைபாடுகளை சுட்டிக்காட்டுகிறார்கள். அதையெல்லாம் உடனுக்குடன் சரி செய்கிறோம். ஆக எங்களுடைய கொள்கை கூட்டணி, ஆரோக்கியமாக தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இது தொடரும். மேலும், இந்தியா என்பது பல்வேறு மொழிகள் பேசக்கூடிய மக்கள் வாழக்கூடிய நாடாகும். ஒற்றை மொழி என்பது தேசிய மொழியாகவோ, ஆட்சி மொழியாகவோ, அரசு மொழியாகவோ நிச்சயம் ஆக முடியாது. அப்படி ஆனால் மற்ற மொழிகள் பாதிக்கப்படும். காலப்போக்கில் அழிந்துவிடும். அதில் மாற்று கருத்து இல்லை. அதுதான் என்னுடைய பதில். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.

Tags : Communist ,CM. ,K. Stalin , We will continue with Communists as a policy alliance and not only in elections: Chief Minister M.K.Stal's speech
× RELATED கடந்த 10 ஆண்டுகாலமாக மாநில உரிமைகளை...