×

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் சீசன் நிறைவு: பறவைகள் இல்லாமல் வெறிச்சோடியது

சென்னை: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் சீசன் நிறைவு பெற்றது. இதனால் இப்பகுதி பறவைகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே  அமைந்துள்ளது, புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். இந்த சரணாலயத்தில் ஒவ்வொரு ஆண்டின் இறுதியில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் சீசன் துவங்கும். அப்போது இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ரஷ்யா, ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 30,000க்கும் மேற்பட்ட பறவைகள் வருவது வழக்கம். குறிப்பாக வர்ணனாரை, சென்னாரை, பூநாரை, கூழைக்கடா, மிளிர்அரிவாள் மூக்கன், கரண்டிவாயன், நீர்காகம் உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் இந்த வேடந்தாங்கல் சரணாலயத்தில் உள்ள கடம்ப மரங்களில் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்யும்.

பின்னர் ஜூலை மாதத்தில் சீசன் முடிந்து அவை தத்தமது நாடுகளுக்கு திரும்பி செல்வது வழக்கம். அதேப்போல், இந்த ஆண்டும் பறவைகள் தங்களின் இனப்பெருக்கத்திற்கு பிறகு, அவற்றின் சொந்த நாடுகளுக்கு திரும்பி சென்று விட்டன. இதனை அடுத்து, இந்த சரணாலயத்தில் பறவைகள் சீசன் தற்போது முடிவடைந்துள்ளது. இதனால் சரணாலயம் தற்போது பறவைகளின்றி காணப்படுகிறது. எனவே, பொதுமக்களின் வருகையும் தற்போது மிகவும் குறைந்து விட்டது. இந்த வருட சீசனில் மட்டும் சுமார் ஒரு லட்சம் பார்வையாளர்கள் இந்த சரணாலயத்திற்கு வந்து சென்றிருப்பதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மீண்டும் இந்த ஆண்டு இறுதியில் இந்த பறவைகளின் சீசன் துவங்கும்.

Tags : Vedantangal Bird , Vedantangal Bird Sanctuary season closes: desolate without birds
× RELATED மதுராந்தகம் அருகே வேடந்தாங்கல்...