தானியங்கி முறையில் மின் பயன்பாடு கணக்கெடுக்க சென்னை முழுவதும் 1.22 லட்சம் ‘ஸ்மார்ட் மீட்டர்’கள் பொருத்தம்: மின்வாரிய அதிகாரி தகவல்

சென்னை: தானியங்கி முறையில் மின் பயன்பாடு குறித்து கணக்கெடுக்கும் திட்டத்திற்காக சென்னையில் 1.22 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது, என மின்வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில் 2.33 கோடி வீட்டு மின் இணைப்புகள், 36 லட்சம் வணிக மின் இணைப்புகள், 7 லட்சம் தொழிற்சாலை மின் இணைப்புகள், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகள், 9 லட்சம் குடிசை மின் இணைப்புகள், 14 லட்சம் இதர இனம் என மொத்தம் 3.24 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. நுகர்வோர் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவை கணக்கெடுக்க மின் ஊழியர்கள், இரு மாதங்களுக்கு ஒரு முறை அவர்களது வீடுகளுக்கு சென்று, அங்குள்ள மீட்டரில் பதிவாகியுள்ள மின்சாரத்தின் பயன்பாட்டை கணக்கெடுக்கின்றனர்.

அவ்வாறு எடுத்த பிறகு கட்டணத் தொகையை நுகர்வோருக்கு வழங்கப்பட்டுள்ள சீட்டில் எழுதி வைத்து விட்டு வருகின்றனர். தொடர்ந்து நுகர்வோர் தங்களுக்கான கட்டணத்தை அருகில் உள்ள மின்வாரிய கட்டண வசூல் மையம், நெட் சென்ட்ர், இணையதளம், யுபிஐ செயலிகள் போன்றவற்றின் மூலம், மின்வாரியத்திற்கு செலுத்தி வருகின்றனர். குறிப்பிட்ட தினங்களுக்குள் நுகர்வோர்கள் கட்டணம் செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும். பிறகு மின்வாரியத்திற்கு அபராதம் செலுத்த நேரிடும். அதன் பிறகே சம்மந்தப்பட்ட நுகர்வோருக்கு மீண்டும் இணைப்பு வழங்கப்படும். இந்நிலையில் சில இடங்களில் இம்முறையினால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.

 

இதுவும் வாரியத்திற்கு ஏற்படும் வருவாய் இழப்புக்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. எனவே இதனை தடுப்பதற்காக தானியங்கி முறையில் நுகர்வோர் பயன்படுத்தும் மின்சாரத்தை கணக்கெடுக்கும் வகையில் ‘ஸ்மார்ட் மீட்டர்’ திட்டத்தை செயல்படுத்துமாறு, அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. அத்திட்டத்தின்படி, மீட்டரில் மின் பயன்பாடு கணக்கெடுக்கும் தேதி, மென்பொருள் வடிவில் பதிவேற்றம் செய்யப்பட்டு, தொலைதொடர்பு வசதியுடன் அலுவலக ‘சர்வரில்’ இணைக்கப்படும். அந்த தேதி வந்தவுடன் தானாகவே நுகர்வோர் பயன்படுத்திய மின்சாரம் கணக்கெடுக்கப்படும். பிறகு சம்பந்தப்பட்ட நுகர்வோருக்கு, எஸ்எம்எஸ் மூலம் அவர் செலுத்த வேண்டிய மின்கட்டணம் குறித்த தகவல் அனுப்பப்படும்.

மேலும் மின்வாரிய அலுவலகத்திற்கும் இதுகுறித்த தகவல் தெரிவிக்கப்படும். அங்கு தகவல் சேகரித்து வைக்கப்படும். இத்திட்டமானது பல்வேறு மாநிலங்களில் வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் இத்திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டு வருகிறது. இதுவரை 1,22,272 மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது. மின்வாரிய அதிகாரி கூறுகையில், ‘சென்னையில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை 1,22,272 மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது. வரும் நாட்களில் மற்ற பகுதிகளிலும் zஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும். அதன் பிறகு நுகர்வோர் பயன்படுத்தும் மின்சாரம் துல்லியமாக கணக்கெடுக்கப்படும்’ என்றார். மீட்டரில் மின் பயன்பாடு கணக்கெடுக்கும் தேதி, மென்பொருள் வடிவில் பதிவேற்றம் செய்யப்பட்டு, தொலைதொடர்பு வசதியுடன் அலுவலக ‘சர்வரில்’ இணைக்கப்படும். அந்த தேதி வந்தவுடன் தானாக நுகர்வோர் பயன்படுத்திய மின்சாரம் கணக்கெடுக்கப்படும். பிறகு சம்பந்தப்பட்ட நுகர்வோருக்கு, எஸ்எம்எஸ் மூலம் அவர் செலுத்த வேண்டிய மின்கட்டணம் குறித்த தகவல் அனுப்பப்படும்.

தமிழகத்தில் உள்ள

மின் இணைப்புகள்

பிரிவு    எண்ணிக்கை (லட்சத்தில்)

வீடு    233

வணிகம்    36

தொழிற்சாலை    7

விவசாயம்               22

குடிசை    9

இதர இனம்    14

மொத்தம்    3.24

Related Stories: