மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பால் 500 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்: மன்ற கூட்டத்தில் மேயர் பிரியா தலைமையில் தீர்மானம்

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பை தொடர்ந்து முதற்கட்டமாக 500 தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை மாநகரா ட்சி மன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் ேநற்று நடந்தது. கூட்டத்திற்கு மேயர் பிரியா தலைமை வகித்தார். துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் ககன்தீப் சிங் பேடி முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது வாய்ப்பு அளிக்கப்பட்ட கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் நிலவும் குறைகளை தெரிவித்து, அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினர். பல கவுன்சிலர்கள் மழைநீர் வடிகால் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை பருவமழை தொடங்குவதற்கு முன்பு முடித்து தர வேண்டும் என வலியுறுத்தினர்.

இவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து மேயர் பிரியா பேசியதாவது: சென்னையில் மழை காலத்தில் தண்ணீர் தேங்குவதை தடுப்பதற்காக மழைநீர் வடிகால்வாய் பணிகள் பல கோடி ரூபாய் செலவில் நடந்து வருகிறது. இந்த பணிகள் விரைவாக முடிப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரியை பார்வையாளராக நியமித்துள்ளார். இந்த அதிகாரிகள் வாரம்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மழைநீர் வடிகால்வாய் பணிகளை ஆய்வு செய்து, தங்களது மண்டலங்களில் எந்த அளவுக்கு பணிகள் முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதை அறிக்கையாக தெரிவித்து வருகின்றனர். பருவமழை தொடங்குவதற்கு முன்பாக இந்த பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மழைநீர் தேங்க கூடிய பகுதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து பணிகளை வேகமாக முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

மாநகராட்சி நிலை குழு தலைவர் க.தனசேகரன் பேசுகையில், ‘‘சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் எம்பி, எம்எல்ஏக்கள் பார்வையாளராக வரலாம். அவர்கள் மன்ற கூட்டத்தில் பேசுவதற்கு அனுமதி உள்ளதா, சட்ட விதி என்ன சொல்கிறது என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்’’ என்றார்.

இதற்கு பதில் அளித்து மேயர் பிரியா பேசுகையில், ‘‘எம்பி, எம்எல்ஏக்களும் மக்கள் பிரதிநிதிகள் தான். மன்ற கூட்டத்திலும் அவர்கள் பேச அனுமதி உள்ளது. அவர்களும் மக்கள் பிரச்னைகளை மன்ற கூட்டத்தில் தெரிவிப்பதற்கு சட்ட விதி உள்ளது’’ என்றார். தொடர்ந்து, பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  சென்னை மாநகராட்சி சார்பில் 281 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிகளில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் மாணவர் சேர்க்கை அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே, மாணவர்களின் நலனுக்காக கற்றல், கற்பித்தல் சிறந்த முறையில் நடைபெறும் வகையில் ஆசிரியர்களை நியமிக்க அனுமதி வழங்கப்படுகிறது. எனவே, ஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்கும் வகையில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே தேவையான ஆசிரியர்களை நியமிக்கலாம். அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும். தேவைப்படும் நிதியை பள்ளி மேலாண்மை குழு மூலம் கல்வி அலுவலர் வழியாக பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

முதல்கட்டமாக 500 ஆசிரியர்கள் வரை நியமிக்கப்பட உள்ளனர். சென்னை மாநகராட்சி பள்ளிகளில், பள்ளி இல்ல நூலகம் செயல்பட ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல்கள் வழங்குவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. தி.நகர் பகுதிகளில் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளுக்கு முக்கிய காரணிகளாக இருப்பது மாம்பலம் கால்வாய்தான். ஏற்கனவே, இந்த கால்வாயை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சீர்படுத்தி அதன் கரை ஓரங்களில் நடைபாதைகள், சைக்கிள் டிராக் மற்றும் பூங்காக்களை அமைத்து அழகுபடுத்தும் திட்டம் மாநகராட்சி உருவாக்கி இருந்தது. இப்போது இந்த திட்டமே மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது உள்பட 98 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

* காற்று தரம் கண்காணிப்பு மையம்

காற்றின் தரத்தை தொடர் ந்து கண்காணிக்க, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் சென்னை மாநகராட்சி 5 இடங்களில் கண்காணிப்பு மையங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சி மூலம் ஒரு இடத்திலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் 4 இடத்திலும் கண்காணிப்பு மையம் அமைக்கும் பணிக்கான மதிப்பீட்டிற்கு ஒப்புதல் வழங்கி ெசன்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* அதிமுக வெளிநடப்பு

மன்ற கூட்டம் தொடங்கியதும், தமிழ்நாடு அரசு உயர்த்திய சொத்து வரி மற்றும் மின்சார கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்து ரிப்பன் மாளிகை வளாகத்திலேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சொத்து வரி மற்றும் மின்சார கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கைகளில் பாதகைகளை ஏந்தியவாறு ரிப்பன் மாளிகை வளாகத்தில் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: