×

மாற்று இடம் வழங்குவது ஆக்கிரமிப்பை ஊக்கப்படுத்தும்: தலைமை நீதிபதி அமர்வு கருத்து

மதுரை: ஆக்கிரமிப்பை அகற்றுவதில் காலதாமதம் செய்வதை ஏற்க முடியாது, அவர்களுக்கு மாற்று இடம் வழங்குவது ஊக்கப்படுத்தும் செயலாகும் என்று தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்த பீட்டர் சுவாமிதாஸ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், நாகர்கோவில் குளத்தூர் பகுதியில் பறக்கை கால்வாய் சுமார் 16 கிமீ தூரம் சென்று சுசீந்திரம் குளத்தில் சேர்கிறது. இந்தப் பகுதியில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் முறையாக தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி எஸ்.ஆனந்தி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு கூடுதல் பிளீடர் ராமச்சந்திரன் ஆஜராகி, ‘‘இந்தப் பகுதியில் இருந்த 388 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. 131 பேரின் ஆக்கிரமிப்புகள் அவர்களுக்கு மாற்றிடம் ஒதுக்கப்பட்டதும் அகற்றப்படும்’’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டக்கூடாது. அது ஒவ்வொரு நாளும் ஆக்கிரமிப்பாளர்களை பாதுகாத்திடுவதைப் போலாகும். ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டும் இதுவரை அகற்றாதது ஏன்? அதிகாரிகளின் நடவடிக்கை ஏற்புடையதல்ல. ஒரு முறை ஆக்கிரமிப்பு ஏற்பட்டுவிட்டால், அவர்களை காலி செய்யும்போது மாற்றிடம் ஒதுக்க வேண்டியுள்ளது. ஆக்கிரமிப்பாளர்களுக்கு அரசு மாற்றிடம் வழங்குவது, அவர்களை ஊக்கப்படுத்தும் செயலாகும். இந்த வழக்கில் மீதமுள்ள 131 ஆக்கிரமிப்புகளையும் உடனடியாக அகற்ற வேண்டும். 4 மாதத்திற்கு மிகாமல் நடவடிக்கையை முடித்து, அதன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர்.

Tags : Chief Justice , Provision of alternative location discourages encroachment: Chief Justice's opinion
× RELATED அவதூறான கருத்துக்களை பரப்பி...