மகாராஷ்டிரா ஆளுநர் சர்ச்சை பேச்சு குஜராத்திகள் இல்லாவிட்டால் மும்பையில் பணமே இருக்காது: தூக்கி ஜெயில்ல போடுங்க: உத்தவ் கொந்தளிப்பு

மும்பை: ‘குஜராத்திகளும், மார்வாடிகளும் இல்லாவிட்டால் மும்பையில் பணமே இருக்காது. பொருளாதார தலைநகர் என்ற அந்தஸ்தையும் இழந்துவிடும்’ என மகாராஷ்டிரா ஆளுநர் கோஷ்யாரி பேசியது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.

மும்பையின் அந்தேரியில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மகாராஷ்டிரா மாநில ஆளுநர் கோஷ்யாரி, ‘குஜராத்திகளும், ராஜஸ்தானை சேர்ந்த மார்வாடிகளும் மும்பையில் இருந்து வெளியேற்றப்பட்டால், மும்பையில்  பணமும் இருக்காது, நாட்டின் பொருளாதார தலைநகர் என்ற பெயரும் இருக்காது,’ என்றார். ஆளுநரின் இந்த பேச்சுக்கு மகாராஷ்டிராவின் பல்வேறு கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இம்மாநில முன்னாள் முதல்வரும், சிவசேனா கட்சி தலைவருமான உத்தவ் தாக்கரே கூறுகையில், ‘‘ஆளுநர் கோஷ்யாரி மராத்தி மக்களை இழிவுப்படுத்தி உள்ளார். அவர் வேண்டும் என்றுதான் இப்படி கூறியுள்ளார். ஆளுநர் தான் வகிக்கும் பதவியின் மரியாதையை காப்பாற்ற வேண்டும். அவரை வீட்டுக்கு திருப்பி அனுப்புவதா அல்லது  சிறைக்கு அனுப்புவதா? என்று முடிவெடுக்க வேண்டியது அவசியம்,’ என கூறி உள்ளார். அதே சமயம், ஆளுநரின் கருத்தில் மகாராஷ்டிரா அரசுக்கு உடன்பாடு இல்லை என்று அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும், பாஜ தலைவர் ஆஷிஷ் செலாரும் கூறி உள்ளனர். கடும் கண்டனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, ‘எனது கருத்துக்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளன. மராத்தியர்களை குறைத்து மதிப்பிடும் எண்ணம் சிறிதளவும் எனக்கில்லை’ என்று ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி விளக்கமளித்துள்ளார்.

Related Stories: