×

இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வாக்காளர் அட்டையுடன் ஆதார் நம்பரை இணைக்க முடிவு; நாளை மறுநாள் அனைத்துக்கட்சி கூட்டம்

சென்னை: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் நம்பரை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆலோசனை நடத்த தலைமை செயலகத்தில் நாளை மறுதினம் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்துக்கு ஓபிஎஸ் அணிக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாவது: இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் நம்பரை இணைக்கும் திட்டம் ஆகஸ்டு 1ம் தேதி (நாளை மறுதினம்) தொடங்கப்படுகிறது. இந்த பணியை அடுத்த ஆண்டு (2023) மார்ச் 31ம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரட்டை பெயர் பதிவு, ஒரே வாக்காளர் பெயர் பல இடங்களில் பதிவாகி இருப்பது என பல்வேறு குழப்பங்கள் ஏற்படுவதை தடுக்கவே இந்த நடைமுறை பின்பற்றப்பட உள்ளது.

வீட்டுக்கு வரும் வாக்குப்பதிவு அலுவலரிடம் ஆதார் நம்பர் அல்லது 6பி விண்ணப்ப படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு ஆதாரத்தை அளிக்க வேண்டும். ஏனென்றால், ஆதார்  நம்பரை அளிக்க யாரையும் கட்டாயப்படுத்த கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆகஸ்டு 1ம் தேதி முதல் தொடங்கப்படும் ஆதார் எண் இணைப்பு பணிகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் விளம்பரம் அளிக்கப்பட வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தவிட்டுள்ளது. மாநில அளவில் தலைமை தேர்தல் அதிகாரியும், மாவட்ட அளவில் மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் (கலெக்டர்கள்) அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி கூட்டத்தை நடத்தி, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இதுகுறித்து அறிவுறுத்தி, அவர்களின் கருத்துக்களையும் பெறவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் நாளை மறுதினம் (ஆகஸ்டு 1ம் தேதி) காலை 11.30 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் தலைமை செயலகத்தில் நடத்தப்படுகிறது. இதற்கிடையில் வருகிற செப்டம்பர் மாதம் வாக்காளர் பட்டியலில் திருத்தம், 18 வயது முடிந்தவர்கள் தங்களது பெயர்களை புதிதாக சேர்க்கும் பணிகள் வழக்கம்போல் தொடங்கும். அப்போது நடத்தப்படும் சிறப்பு முகாம்களிலும் இந்த 6பி படிவம் பெறப்பட்டு, ஆதார் நம்பர் இணைக்கப்படும். சென்னையில் 3,750 வாக்குச்சாவடி அலுவலர்கள் தலைமையிலான குழுக்கள் வீடு வீடாக சென்று வாக்காளர்களிடம் ஆதார் எண்களை சேகரிக்கும் பணியை தொடங்குகிறார்கள்” என்றார்.

நாளை மறுதினம் தலைமை செயலகத்தில் நடைபெறும் கூட்டத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட தமிழக அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜ, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 9 கட்சிகளுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதிமுக சார்பில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்துக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது, அதிமுக தலைமை அலுவலகம் எடப்பாடி பழனிசாமி அணியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால், ஓ.பன்னீர்செல்வம் அணியினர் நாளை மறுதினம் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு தனியாக அழைப்பு கடிதம் அனுப்பப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

Tags : Chief Election Commission of India , Decision to link Aadhaar number with voter card as directed by Chief Election Commission of India; All party meeting the day after tomorrow
× RELATED காரைக்காலில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை