எடப்பாடி பழனிசாமியை அதிமுகவில் இருந்து நீக்கி உள்ளோம் : தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் மீண்டும் கடிதம்

சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினை எழுந்ததை தொடர்ந்து எடப்பாடி அணியினர் கடந்த 11ம் தேதி கட்சியின் சிறப்பு பொதுக்குழுவை கூட்டி பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர். அது மட்டுமின்றி கட்சியின் விதிகளிலும் திருத்தங்கள் செய்யப்பட்டன. அதன்படி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்த ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரும் மாறி மாறி முக்கிய நிர்வாகிகளை நீக்கி வருகிறார்கள்.அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கமும், துணை ஒருங்கிணைப்பாளர்களாக மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரை ஓபிஎஸ் நியமனம் செய்தார். இணை ஒருங்கிணைப்பாளர் பதவி என்பது, அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி வகித்து வந்த பதவி ஆகும்.

இந்த நிலையில் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை சந்தித்து பேச நேரம் கேட்டார். ஆனால் அவருக்கு மோடி நேரம் ஒதுக்கவில்லை. ஏமாற்றத்துடன் தனது பயணத்தை பாதியில் முடித்து கொண்டு திரும்பினார். பின்னர், கடந்த 2 நாட்களுக்கு முன் சென்னை வந்த பிரதமர் மோடியை சந்தித்து பேச எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரும் நேரம் கேட்டனர். அப்போதும் பிரதமர் அவர்களை தனியாக சந்தித்து பேசுவதை தவிர்த்து விட்டார். இதுகுறித்து தமிழக பாஜ தலைவர்கள் கூறும்போது, “ஒருங்கிணைந்த அதிமுகவையே பாஜ விரும்புகிறது. மேலும், தமிழகத்தில் வரும் தேர்தலில் பாஜ தலைமையில் கூட்டணி அமைக்கவே விருப்பம் தெரிவித்துள்ளோம்” என்றனர்.

இந்த நிலையில், கடந்த 11ம் தேதி எடப்பாடி பழனிச்சாமி அணியினர் நடத்திய பொதுக்குழுவை ரத்து செய்ய வேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நேற்று நிராகரித்து விட்டது. இந்த பிரச்னையை 3 வாரத்தில் உயர் நீதிமன்றமே விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதுவரை அதிமுகவில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இதை ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தங்களுக்கு கிடைத்துள்ள சாதகமான தீர்ப்பு என்று கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு இன்று மீண்டும் ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், “எடப்பாடி பழனிசாமி புதிய நிர்வாகிகளாக சிலரது பெயரை அறிவித்துள்ளார்.  இது சட்ட விரோதமான அறிவிப்பு ஆகும். கட்சி விதிகளுக்கு எதிராக அவர்  செயல்பட்டுள்ளார். புதிய நிர்வாகிகளை நியமனம் செய்யும்போது தன்னிடம்  (ஓபிஎஸ்) உரிய அனுமதி பெற வேண்டும். ஆனால் எந்த அனுமதியும் பெறப்படவில்லை.  எனவே புதிய நிர்வாகிகளை நியமிக்க எடப்பாடிக்கு எந்த அதிகாரமும் இல்லை.  அவரது அறிவிப்பு கட்சி விதிகளின்படி செல்லாது. எனவே தலைமை தேர்தல் ஆணையர்  அதிமுக புதிய நிர்வாகிகள் நியமனத்தை ஏற்றுக் கொள்ளக்கூடாது.

அதை நிராகரிக்க  வேண்டும். 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவும் சட்ட விரோதமானது. அதை  அடிப்படையாக கொண்டு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு இருப்பதும் சட்ட  நடைமுறைக்கு எதிரானதாகும். இதை தலைமை தேர்தல் ஆணையம் நிராகரிக்க  வேண்டும். எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 50 நிர்வாகிகளை அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர் வகித்து வந்த இணை ஒருங்கிணைப்பாளர் பதவி வைத்திலிங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று துணை ஒருங்கிணைப்பாளர்களாக மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதே தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கடிதத்தில் ஓபிஎஸ் கூறியுள்ளார்.ஓபிஎஸ் - இபிஎஸ் என இரு தரப்பிலும் மாறி மாறி தேர்தல் ஆணையம், நீதிமன்றம், சட்டப்பேரவைக்கு மனுக்களை அனுப்பியபடி உள்ளனர். அதிமுக கட்சியை தக்க வைத்துக்கொள்ளவும், தங்களது பதவிகளை காப்பாற்றி கொள்ளவும் இரு தரப்பிலும் பலமுனைகளில் பலப்பரீட்சை நடந்து வருகிறது. நீதிமன்றம் மற்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் யார் தலைமையில் அதிமுக செயல்பட வேண்டும் என்று ஒரு தெளிவான தீர்ப்பு வழங்கும் வரை இந்த பிரச்னை நீடிக்கும் என்றே கூறப்படுகிறது. இதனால் அதிமுகவில் ஏற்பட்டுள்ள சர்ச்சை நீடித்துக்கொண்டே செல்ல வாய்ப்புள்ளது.

Related Stories: