இந்தியாவின் முதல் குரங்கு அம்மை நோயாளி குணமடைந்துவிட்டார் : கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல்!!

திருவனந்தபுரம்: இந்தியாவின் முதல் குரங்கு அம்மை நோயாளி குணமடைந்துவிட்டதாக கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை (மங்கிபாக்ஸ்) நோய், தற்போது உலகம் முழுவதும் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், இந்த நோய் இந்தியாவுக்கும்  வந்து விட்டது. கேரள மாநிலம், கெல்லத்தை சேர்ந்த 35 வயது நபர் கடந்த 12ம் தேதி அமீரகத்தில் இருந்து வந்தார். இவருக்கு குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் தென்பட்டன.இதனால் அவர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டார்.

திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இவருடைய ரத்த மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனைக்காக புனேவுக்கு அனுப்பப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு குரங்கு அம்மை இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தியாவிலேயே கேரளாவில் தான் முதல் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார். குரங்கு அம்மை நோயாளியும் இங்கு முதல்முறையாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் “திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த இவர் பூரண குணமடைந்துள்ளார். இவருக்கு நோய்த் தொற்று முழுமையாக நீங்கிவிட்டதா என்பதை உறுதி செய்ய 72 மணி நேரத்தில் இரண்டு முறை சோதனை செய்யுமாறு தேசிய வைரலாஜி மையம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, அந்த நபருக்கு இருமுறை பரிசோதனை செய்யப்பட்டது. இரண்டு முறையுமே அவருக்கு சோதனை முடிவு நெகடிவ் என்றே வந்தது. அவரது உடலில் இருந்த கொப்புளங்கள் அனைத்துமே முழுமையாக மறைந்துவிட்டன. அவர் இன்றே வீடு திரும்புவார். அந்த நபரின் குடும்பத்தினர் அனைவருக்கும் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளும் நெகடிவ் என்றே வந்துள்ளது”, என்றார்.

Related Stories: