×

திருப்பூரில் தொழிலாளர்களுக்கு குறைந்து வரும் வேலை: நூல் விலை உயர்வு காரணமாக கடும் நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ள திருப்பூர் தொழில்துறை...

திருப்பூர்: நூல் விலை உயர்வு காரணமாக திருப்பூர் தொழில்துறை நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்து வாழ்வாதார நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளனர். வந்தாரை வாழவைக்கும் இந்தியாவின் பின்னலாடை தலைநகரமாம் திருப்பூரில் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்து வருகிறது. முன்னணி பின்னலாடை நிறுவனங்களில் சில யூனிட்டுகள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஜாப் ஒர்க் செய்ய கூடிய நூற்றுக்கணக்கான பவர் டேபிள் நிறுவனங்களிலும் வேலை குறைந்து உள்ளது. உள்நாட்டு உற்பத்தி பிரிவிலும் சிறு, குறு நிறுவனங்களுக்கு வேலை இல்லை. இதனால் வழக்கமான திருப்பூரின்  உற்பத்தியில் 50 சதவீதம் குறைந்துள்ளது. நூல் விலை உயர்வு காரணமாக பல நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தியுள்ளதால் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

6, 7 மாதங்களாக உயர்ந்து வரும் நூல் விலை பின்னலாடை உற்பத்தியை முடக்கியுள்ளது. அதேபோல், ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு சந்தைக்கான ஆடை உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு, உள்நாட்டு சந்தைகளில் மக்களின் வாங்கும் சக்தி சரிந்துள்ளதால் உற்பத்தியான ஆடைகள் விற்பனையின்றி தேங்கி போய் இருப்பதாகவும் தொழில்துறையினர் கவலையுடன் தெரிவித்தனர். இதனிடையே, மிக பெரிய ஏற்றுமதி நிறுவங்கள் கூட விடுதிகளில் தங்க வைத்திருக்கும் பிற மாநில தொழிலாளர்களுக்கு வேலை தருகின்றனர். வேலைகள் தர விட்டால் அவர்கள் மொத்தமாக சொந்த ஊருக்கு சென்று விடுவார்கள் என்றும் காரணம் சொல்லப்படுகிறது. சிறு, குறு ஏற்றுமதி நிறுவனங்கள் ஆர்டர்களை பெற முடியாமல் திண்டாடி வருவதால் உள்ளூர் தொழிலாளிகளுக்கு வேலை கிடைப்பதில்லை.

இந்நிலையில், குழந்தைகளின் படிப்பு, வீட்டு வாடகை என பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். கிடைக்கும் வேலையை பல தொழிளார்கள் சேர்ந்து பங்கிட்டு கொள்ளவேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, ஒன்றிய அரசின் பணம் மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி கொள்கைகள் திருப்பூர் தொழில்துறையை கடுமையாக பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து நூல் விலை உயர்வு, மூலப்பொருட்கள், உதிரி பாகங்களின் விலை உயர்வு போன்றவற்றால் குப்புற தள்ளிய குதிரை குழியும் பறித்த கதையாகி போனதாக தொழில் முனைவோர் குமுறுகின்றனர். உள்நாட்டு சந்தை வீழ்ச்சி, மக்களின் வாங்கும் திறன் சரிந்ததென திருப்பூரின் தொழில்துறை கடும் நெருக்கடியில் உள்ளதாகவும், ஒன்றிய அரசு உடனடியாக தலையிட்டு பின்னலாடை தொழிலை காப்பாற்ற வேண்டும் எனவும் தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.               


Tags : Tiruppur ,Thiruppur , In Tirupur, for industrialists, work, yarn, promotion, crisis, industry
× RELATED திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியில்...