×

தேர்தல் ஆணைய ஆலோசனை கூட்டம்.. ஓபிஎஸ்-க்கும் அழைப்பு கடிதம் :அதிமுக சார்பில் கோவை செல்வராஜ் கலந்து கொள்வார் என ஓபிஎஸ் பதில்!!

சென்னை, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் நம்பரை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆலோசனை நடத்த தலைமை செயலகத்தில் நாளை மறுதினம் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்துக்கு ஓபிஎஸ் அணிக்கும் தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் நம்பரை இணைக்கும் திட்டம் ஆகஸ்டு 1ம் தேதி (நாளை மறுதினம்) தொடங்கப்படுகிறது. இந்த பணியை அடுத்த ஆண்டு (2023) மார்ச் 31ம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரட்டை பெயர் பதிவு, ஒரே வாக்காளர் பெயர் பல இடங்களில் பதிவாகி இருப்பது என பல்வேறு குழப்பங்கள் ஏற்படுவதை தடுக்கவே இந்த நடைமுறை பின்பற்றப்பட உள்ளது.

நாளை மறுதினம் தலைமை செயலகத்தில் நடைபெறும் கூட்டத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட தமிழக அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜ, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 9 கட்சிகளுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதிமுக சார்பில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்துக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது, அதிமுக தலைமை அலுவலகம் எடப்பாடி பழனிசாமி அணியின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதன்படி அனைத்து கட்சி கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் இன்பத்துறை ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தற்போது அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும் அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில் கோவை செல்வராஜ் பங்கேற்பார் என தலைமை தேர்தல் அதிகாரிக்கு ஓபிஎஸ் கடிதம் அனுப்பியுள்ளார்.


Tags : Election ,OPS ,Goi Selvaraj , Election Commission, Consultation, Meeting, OPS, ADMK, Coimbatore Selvaraj
× RELATED இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி...