பயண நேரம் 40 நிமிடங்கள் குறைப்பு கன்னியாகுமரி எக்ஸ்பிரசின் வேகம் அதிகரிப்பு: நெல்லையில் இனிமேல் அரைமணி நேரம் நிற்காது

நெல்லை: கன்னியாகுமரியில் இருந்து நெல்லை வழியாக சென்னை செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரசின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை நெல்லையில் அரைமணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் இனிமேல் 5 நிமிடங்கள் மட்டுமே நிறுத்தப்பட உள்ளது. நெல்லையில் இருந்து சென்னை செல்லும் பெரும்பாலான பயணிகளின் தேர்வான நெல்லை எக்ஸ்பிரசுக்கு அடுத்தபடியாக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் உள்ளது. குருவாயூர், அனந்தபுரி உள்ளிட்ட சென்னை செல்லும் ரயில்களை ஒப்பிடுகையில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் அதிவேக ரயில் என்பதால், அதற்கு தென்மாவட்ட மக்கள் மத்தியில் மவுசு அதிகம். இந்த ரயிலில் நாகர்கோவிலிருந்து தினசரி சராசரியாக 1000 நபர்கள் பயணம் செய்கின்றனர். நாகர்கோவில் ரயில் நிலையத்துக்கு வரும் வருவாயில் 50 சதவீதம் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் மூலம் கிடைத்து வருகிறது.

இந்த ரயில் கன்னியாகுமரியிலிருந்து மாலை 5:05 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு வெகு சீக்கிரம் வந்துவிடுகிறது. நெல்லையில் சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் சென்னைக்கு மறுநாள் காலை 6:10 மணிக்கு செல்கிறது. வருகிற அக்டோபர் 10ம் தேதி முதல் இந்த ரயில் வேகம் அதிகரிக்கப்பட்டு நெல்லையில் அதிக நேரம் நிறுத்தி வைக்கப்படுவது தவிர்க்கப்பட்டு, அந்த நேரத்துக்கு பதிலாக கன்னியாகுமரியிலிருந்து தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கால அட்டவணைப்படி கன்னியாகுமரியில் இருந்து 5.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில், நாகர்கோவிலுக்கு மாலை 6:07 மணிக்கும், வள்ளியூருக்கு 6:35 மணிக்கும், நெல்லைக்கு 7.20 மணிக்கும் வந்து செல்கிறது. 5 நிமிடங்கள் மட்டுமே நெல்லையில் நிறுத்தப்பட்டு, உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு செல்கிறது. புதிய கால அட்டவணை காரணமாக தேவையின்றி அரைமணி நேரம் நெல்லையில் நிறுத்தி வைக்கப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது.  மறு மார்க்கத்தில் ரயில் நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை.

இதுகுறித்து தென்மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் ஸ்ரீராம் கூறுகையில், ‘‘தற்போது மதுரை முதல் சென்னை வரை உள்ள ரயில்பாதையில் இருவழிபாதை பணிகள் 100 சதவீதம் முடிந்து விட்டது. மதுரை முதல் நாகர்கோவில் வரை உள்ள இருவழிபாதை பணிகள் 90 சதம் நிறைவு பெற்றுவிட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களின் வேகத்தை இன்னமும் அதிகரிக்க முடியும். கன்னியாகுமரியிலிருந்து மதுரை வரை உள்ள இருவழிப்பாதை பணிகள் முடிவு பெற்று விட்டால் சென்னைக்கு சுமார் 8 மணி நேரத்தில் போய்ச் சேர முடியும்.

இருவழிபாதை பணிகள் முடிவு பெற்ற பின்னர் கன்னியாகுமரி எக்ஸ்பிரசை கன்னியாகுமரியிலிருந்து இரவு 7:30 மணிக்கு புறப்படுமாறு இயக்க வேண்டும். அப்போது சூரிய அஸ்தமனத்தை பார்த்துவிட்டு சுற்றுலா பயணிகள் இந்த ரயிலில் பயணிக்க முடியும். என்றார். இதேபோல் பெங்களூரில் இருந்து திருவனந்தபுரம் வழியாக கன்னியாகுமரி வரும் ஐலன்ட் எக்ஸ்பிரசின் வேகமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கோட்டயம் பகுதியில் உள்ள இருவழிபாதை பணிகள் நிறைவு பெற்று விட்டதால் வேகம் அதிகரிக்கப்பட்டு 55 நிமிடம் பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

Related Stories: