×

சர்க்கார் தோப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைந்துள்ள சோலார் பிளாண்ட் மூலம் ரூ.1.80 கோடி மின் கட்டணம் சேமிப்பு: வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

வேலூர்: சர்க்கார் தோப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைந்துள்ள சோலார் பிளாண்ட் மூலம் ரூ.1.80 கோடி மின் கட்டணம் மிச்சமாகியுள்ளது என்று வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலை பணிகள், பாதாள சாக்கடை திட்டப்பணிகள், கோட்டையை அழகுபடுத்துதல், சோலார் பிளாண்ட் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் 30 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 22 பணிகள் உட்பட மொத்த பணிகளும் அடுத்து ஆண்டு மார்ச் 15ம் தேதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான சர்க்கார் தோப்பில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் சேலார் பிளாண்ட் அமைக்கப்பட்டது. இந்த சோலார் பிளாண்ட் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வந்தது. இதன் மூலம் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதியில் இருந்து நேற்று வரையில் 26.41 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.21 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரையில் மின்கட்டணம் மிச்சமாகும். அதன்படி சோலார் பிளாண்ட் தொடங்கியது முதல் நேற்று வரையில் மொத்தம் ரூ.1.80 கோடி வரையில் மின் கட்டணம் மிச்சமாகியுள்ளது. வெயில் அதிகமாக இருக்கும் பட்சத்தில் மின் உற்பத்தி அதிகரிக்கும், மின்கட்டணம் ரூ.2.10 கோடி வரையிலும் மிச்சமாக வாய்ப்புள்ளது என்று வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல் வேலூர் மாநகராட்சி முழுவதும் உள்ள பள்ளிகள், மாணவ, மாணவியர் விடுதிகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட மாநகராட்சிக்கு சொந்தமான 109 கட்டிடங்களில் சோலார் பிளாண்ட் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 437 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தியாகும். இதனால் மாநகராட்சிக்கு ரூ.3.50 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரையில் மின் கட்டணம் மிச்சமாகும். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் மாநகராட்சிக்கு சொந்தமான சர்க்கார் தோப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சோலார் பிளாண்ட் மூலம் ஆண்டுக்கு ரூ.2.10 லட்சம் வரையில் மின்கட்டணம் மிச்சமாகிறது. கடந்த அக்டோபர் முதல் நேற்று வரையில் ரூ.1.80 மின்கட்டணம் மிச்சமாகியுள்ளது. அதேபோல் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்கள் மீது வைக்கப்பட்டுள்ள சோலார் பேனல்கள் மூலம் 437 கிலோவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. இதன்மூலம் ரூ.4 லட்சம் வரையில் மின்கட்டணம் மிச்சமாகிறது’ என்றனர்.

*மின்துறைக்கு 26.41 லட்சம் யூனிட் மின்சாரம்

வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சோலார் பிளாண்ட் மூலம் ஆண்டுக்கு 26.41 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த மின்சாரம் அனைத்தும் மின்வாரியத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் அதற்குண்டான தொகைக்கு, ஏற்பட மாநகராட்சிக்கு செலவாகும் மின்கட்டணத்தில் கழிக்கப்படுகிறது. அதன்படி கடந்த அக்டோபர் முதல் நேற்று வரையில் 1.80 கோடி மின்கட்டணம் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Solar Plant ,Smart City Project ,Sangar Throp ,Vellore Corporation , Rs 1.80 crore electricity bill savings through solar plant under Smart City project at Sarkar Thop: Vellore Corporation officials inform
× RELATED புதுச்சேரியில் கால்வாயில்...