கடம்பூர் காட்டாறுகளின் குறுக்கே ரூ.6.68 கோடியில் பாலங்கள் கட்ட டெண்டர்: மலைகிராம மக்கள் மகிழ்ச்சி

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி அடர்ந்த வனப்பகுதியை உள்ளடக்கியதாகும். இந்த வனப்பகுதியில் கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையம் செல்லும் சாலையில் அரிகியம், மாக்கம்பாளையம், கோம்பை தொட்டி, கோவிலூர், கோம்பையூர், குரும்பூர், மாமரத்து தொட்டி, மேலூர், மந்தை தொட்டி, ஜகளியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

இங்கு வசிக்கும் மக்கள் கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்கண்ட கிராமங்களில் குடியிருக்கும் பொதுமக்கள் தங்கள் அன்றாட தேவைக்கான பொருட்களை வாங்குவதற்கும், மருத்துவ சிகிச்சை பெறுவதற்கும் கடம்பூர் மற்றும் சத்தியமங்கலத்திற்கு வந்து செல்கின்றனர். அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த கிராமங்களுக்கு வனப்பகுதியில் உள்ள கரடுமுரடான மண் சாலையை  பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலையில் குரும்பூர் பள்ளம் மற்றும் சர்க்கரை பள்ளம் என இரண்டு காட்டாறுகள் ஓடுகின்றன.

மழைக்காலங்களில் இந்த இரண்டு காட்டாறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. மேலும் ஆண்டுதோறும் சுமார் ஐந்து மாதங்கள் இந்த இரண்டு காட்டாறுகளிலும் தண்ணீர் ஓடிக் கொண்டிருப்பது வழக்கம்.அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் சத்தியமங்கலத்தில் இருந்து மாக்கம்பாளையம் பகுதிக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் காட்டாற்று வெள்ளத்தை கடக்க முடியாமல் மேற்கண்ட வன கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு ஏற்படுவதும் தொடர்கதையாக இருந்து வந்தது.

மேலும் உயர்கல்வி கற்பதற்காக வன கிராமங்களில் உள்ள மாணவ மாணவியர் கடம்பூர் மற்றும் சத்தியமங்கலம் செல்ல முடியாமல் மிகுந்த அவதிக்குள்ளாகினர். இதைத்தொடர்ந்து மாக்கம்பாளையம் பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மலை கிராம மக்கள் கடந்த 50 ஆண்டுகளாக வனப்பகுதியில் உள்ள சாலையை சீரமைப்பதோடு இரண்டு காட்டாறுகளின் குறுக்கே இரு பாலங்கள் கட்டி தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

வனப்பகுதியில் உள்ள சாலை சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதி என்பதால் வனத்துறையினர் மேற்கண்ட வனச்சாலையை ஊரக வளர்ச்சி துறைக்கு ஒப்படைத்தால் மட்டுமே சாலை அமைக்கவும், பாலங்கள் கட்டவும் ஏதுவாக அமையும் என்பதால் வனத்துறைக்கு சொந்தமான நிலம் ஒரு ஏக்கர் ஒப்படைப்பு செய்யப்பட்டால் அதற்கு மாற்றாக வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் இரண்டு ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்பது விதிமுறை என்பதால் வனச்சாலையில் சாலை அமைக்க தேவைப்படும் 15 ஏக்கர் நிலத்தை எடுப்பதற்கான நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் வருவாய்த்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு அதற்கான ஆய்வுகளும் நடத்தப்பட்டது.

இந்நிலையில் குரும்பூர் பள்ளம் மற்றும் சர்க்கரைப் பள்ளத்தின் குறுக்கே பாலம் கட்டுவதற்கு வனத்துறை சார்பில் தடையில்லா சான்று வழங்கப்பட்டதை தொடர்ந்து ஊரக வளர்ச்சித் துறை சார்பில் இரண்டு பாலங்கள் கட்டுவதற்காக மதிப்பீடு தயார் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட துறை மூலம் நிதி ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து தற்போது குரும்பூர் பள்ளத்தின் குறுக்கே ரூ.3.33 கோடி செலவில் புதிய பாலம் கட்டவும், சக்கரை பள்ளத்தின் குறுக்கே ரூ.3.35 கோடி செலவில் புதிய பாலம் கட்டவும் டெண்டர் விடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 2 காட்டாறுகளின் குறுக்கே இரு பாலங்கள் கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்ட தகவல் அறிந்த மாக்கம்பாளையம் மலைப்பகுதியில் உள்ள வன கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முதற்கட்டமாக இரு பாலங்கள் கட்டும் பணி விரைவில் தொடங்கும் எனவும் இதைத்தொடர்ந்து வனப்பகுதியில் உள்ள எட்டு கிமீ தூரத்திற்கான கரடு முரடான மண்சாலையை முறையாக வனத்துறையினர் ஊரக வளர்ச்சித்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் தார்சாலை அமைக்கப்படும் என ஊரக வளர்ச்சி துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 காட்டாறுகளின் குறுக்கே புதிய பாலங்கள் கட்ட டெண்டர் விடப்பட்டதை அறிந்த மலை கிராம மக்கள் தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும், ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கே.சி.பி. இளங்கோ கூறியதாவது: கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையம் செல்லும் வனப்பகுதியில் உள்ள 2 காட்டாறுகளின் குறுக்கே பாலம் கட்டித் தர வேண்டும் என்பது மலை கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த நிலையில் தற்போது 2 பாலங்களும் நபார்டு திட்டத்தின் கீழ் கட்டுவதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இரண்டு பாலங்கள் கட்டப்பட்டு வனப்பகுதியில் உள்ள கரடு முரடான மண் சாலை தார் சாலையாக சீரமைக்கப்பட்டால் இச்சாலை தமிழக - கர்நாடக மாநிலத்தை இணைக்கும் இணைப்பு சாலையாகவும் விளங்கும். மாக்கம்பாளையம் பகுதியில் இருந்து கர்நாடக மாநிலத்தில் உள்ள ஜல்லிபாளையம், ஊகியம், நல்லூர் கூடலூர் உள்ளிட்ட பகுதிகளை இணைப்பதோடு கர்நாடக மாநிலத்தில் பிரசித்தி பெற்ற மாதேஸ்வரன் மலை பகுதிக்கு  விரைவில் சென்றடையலாம். இதன் காரணமாக கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள  கிராம மக்கள் மட்டுமின்றி கர்நாடக மாநில மக்களும் பயன்பெறுவர் என கூறினார்.

Related Stories: