கூடலூர் அருகே ‘கிடுகிடு’ பள்ளத்தாக்கு, அழகு கொஞ்சும் அருவிகள் சந்தனமலை முருகன் கோயில் சுற்றுலா தலமாகுமா?: சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

கூடலூர்:   கூடலூர் அருகே  ஓவேலி பேரூராட்சியில் சுற்றுலா தலமாக சந்தனமலை முருகன் கோயில் பகுதியை மாற்றுவதற்கு பிரிவு 17 நிலப்பிரச்னை தடையாக உள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு கண்டு, இப்பகுதியில் அடிப்படை பணிகளை மேம்படுத்த வேண்டும் என சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கோரியுள்ளனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் சட்டமன்ற தொகுதியில் ஓவேலி பேரூராட்சி இயற்கை எழில்மிக்க பகுதியாக விளங்குகிறது.

இதற்கு, மலைத் தொடர்கள், அருவிகள், ஆறுகள், தேயிலை, காப்பி, ஏலக்காய் தோட்டங்கள் என பசுமையும், நீர்வளமும் மிகுந்து அழகு கொட்டி கிடப்பதுதான் காரணம். குறிப்பாக ஓவேலி பேரூராட்சியில் உள்ள சந்தனமலை, சுற்றுலா பயணிகளை பிரமிக்க வைக்கிறது. சந்தனமலையின் இயற்கையான நிலவியல் அடிப்படையிலான அமைவிடமே சுற்றுலா சிறப்புமிக்க பகுதியாக அதனை மாற்றியுள்ளது என்பதே உண்மை.கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் நகராட்சி அலுவலக பகுதியில் பிரிந்து  எல்லமலைக்கு செல்லும் வழியில் சுமார் 14 கிமீ தூரத்தில் சந்தன மலை சுற்றுலா தலம் அமைந்துள்ளது.

இங்குள்ள மலை குன்றின் மீது அமைந்துள்ள  முருகன் கோயில் பகுதியில் இருந்து மலை தொடர்கள், பள்ளத்தாக்கு காட்சிகளை பார்க்கலாம். இந்த இயற்கை காட்சிகள் காண்போர் மனதை மயக்கும் வகையில் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு.தமிழ்நாடு சுற்றுலா துறையினர்,  நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களில் முக்கியமான ஒரு பகுதியாக இந்த சுற்றுலா தலத்தையும்  இணைத்துள்ளனர்.  இப்பகுதிக்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, அண்டை மாநிலம் கேரளாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

இதுதவிர, முருகன் கோயிலில் பாரம்பரியமான முறையில் அவ்வப்போது நடத்தப்படும் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாக்களில் இப்பகுதிக்கு ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் குவிகின்றனர்.  இதையடுத்து சந்தனமலை தலத்தை மேம்படுத்தும் வகையில் கடந்த பல வருடங்களுக்கு முன்னர், நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது. ஆனால், இந்த மேம்பாட்டு பணிகள், நடவடிக்கைகள் பிரிவு 17 நில பிரச்சினை காரணமாக கிடப்பில் போடப்பட்டது. இதையடுத்து, பேரூராட்சி நிர்வாகத்திற்கு வருவாயை அதிகரிக்கும் வகையில், கோவில் வளாகத்தை ஒட்டி அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனவும், இப்பகுதியை சிறந்த சூழல் சுற்றுலா தலமாக மாற்றுவதன் மூலம் தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலமான கேரளா பயணிகளையும் அதிகளவில் ஈர்க்க முடியும் எனவும் சுற்றுலா ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  

மேலும் ஓவேலி பேரூராட்சி நிர்வாகம் தரப்பில் கூறுகையில், சந்தன மலை முருகன் கோயில் பகுதியை சுற்றுலா வளர்ச்சி பணிகள் தடைபட்டுள்ளது. அரசு பள்ளி கட்டிடங்கள், பாலங்கள், சாலைகள் அமைப்பதற்கு பிரிவு 17 நிலப்பிரச்னை தடையை ஏற்படுத்தும் சூழல் நிலவுகிறது. இப்பிரச்னைக்கு முதலில் தீர்வு கிடைத்தால்தான் மற்ற, எந்தவிதமான பணிகளையும் பேரூராட்சி பகுதியில் மேற்கொள்ள முடியும். சுற்றுலாவை கொண்டு பயணிகளை அதிகளவில் கவர்ந்து பேரூராட்சிக்கு வருவாயையும் ஈட்ட முடியும். மேலும் இதன்மூலம் மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் அதிக நிதியை வருவாய் பெற வாய்ப்பு ஏற்படும்’’ என தெரிவித்தனர்.

இதையடுத்து, இயற்கை பள்ளத்தாக்கு, முருகன் கோயில், நீர்வீழ்ச்சிகள் என இயற்கை அழகு கொஞ்சும் சந்தனமலை பகுதியை விரைவில் சுற்றுலா தலமாக்க தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, ஓவேலி பேரூராட்சி நிர்வாகமும் முனைப்புடன் செயலாற்ற வேண்டும். இதனை அதிக அக்கறையுடன் கையாண்டு, முன்னுரிமை அளித்து நீலகிரி மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஓவேலி பேரூராட்சி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அண்டை மாநிலமான கேரளா பயணிகள் உள்பட காண்போரை கவர்ந்து சுண்டி இழுக்கும் ஓவேலி சந்தனமலை, சுற்றுலா தலமாக விரைவில் மாற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

*இயற்கை எழில் கொஞ்சும் நீர்வீழ்ச்சிகள்

சந்தன மலை  பகுதியில் இருந்து கிளன் வன்ஸ், ஹோப், பார்வுட் உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளையும், சீபுரம், எல்லமலை, பெரிய சோலை, ஆறூற்று பாறை பள்ளத்தாக்கு காட்சிகளையும், கிழக்கு தெற்கு பகுதிகளில் உயர்ந்த மலை தொடர்களையும், மலை இடுக்குகள் வழியாக அருவிகள் மற்றும் ஆறுகளையும் பார்த்து ரசிக்க முடியும்

Related Stories: