ஊட்டி - மஞ்சூர் சாலையில் கற்பூர மரங்களை அகற்றும் பணியில் அலட்சியம்: வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்

ஊட்டி:  ஊட்டி - மஞ்சூர் சாலையில் லவ்டேல் முதல் காந்தி பேட்டை வரை சாலையோர மரங்களை அகற்றுவதில் அலட்சியம் காட்டுவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. நீலகிரி மாவட்டத்தில் பருவமழை சமயங்களில் பலத்த காற்றும் வீசும். காற்றின் வேகத்தை தாக்கு பிடிக்காத கற்பூர மரங்கள் மற்றும் சீகை மரங்கள் சாய்ந்து விழுவது வாடிக்கை. குடியிருப்புகளுக்கு அருகே மற்றும் சாலையோர மரங்கள் விழும் போது விபத்து ஏற்பட்டு வருகிறது. சில சமயங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன் நீலகிரி மாவட்டத்தில் பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்தது. அப்போது. ஊட்டி - மஞ்சூர் சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து கடுமையாக பாதித்தது. குறிப்பாக, லவ்டேல் பகுதியில் லாரன்ஸ் பள்ளி அருகே ராட்சத கற்பூர மரங்கள் விழுந்ததில் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாயினர். இந்த கற்பூர மரம், இரவு நேரத்தில் விழுந்ததால், அதிர்ஷ்டவசமாக உயிர் சேதமோ, அசம்பாவிதமோ ஏற்படவில்லை.

இதையடுத்து, சாலையோர மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், ஊட்டி நகராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலை துறையினரும் அலட்சியம் காட்டி வருகின்றனர். ஏற்கனவே மக்கள் கோரிக்கையை ஏற்று, சாலையோர மரங்களை அகற்றுவது குறித்து நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கடந்த 2 ஆண்டிற்கு முன் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால், ஆய்வு மட்டுமே நடத்தப்பட்டு, பணிகளில் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வந்தனர். இந்நிலையில், ஊட்டியில் அபாயகரமான மரங்களை அகற்றும் பணிகளை உடனடியாக அதிகாரிகள் துவக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: