×

திருப்பத்தூர் பகுதிகளில் கனமழை: மயில் பாறை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்: பொதுமக்கள் ஆனந்த குளியல்

திருப்பத்தூர்:திருப்பத்தூர் பகுதிகளில் பெய்த கனமழையால் மயில் பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அங்கு பொதுமக்கள் குவிந்து ஆனந்த குளியல் போட்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலை, ஜவ்வாது மலை, ஆண்டியப்பனூர் நீர்தேக்க அணை, ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி ஆகியன சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் அதிக அளவில் குவிகின்றனர்.

மாவட்டத்தின் மலை இளவரசிகளாக இருந்து வரும் ஜவ்வாது மலை மற்றும் ஏலகிரி மலை பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும், ஏலகிரி மலை பின்புறம் குறிசிலாபட்டு அடுத்த நாராயணபுரம் அருகே மயில் பாறை என்ற முருகன் கோயில் உள்ளது. இந்த கோயில் அருகே 3 கி.மீ. தூரத்தில் ஒத்தையடி பாதையில் நடந்து சென்றால், கனமழை காரணமாக தற்போது புதிய நீர்வீழ்ச்சி ஏற்பட்டு, தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

இதனால் அங்கு குவிந்து வரும் பொதுமக்கள், மயில் பாறை நீர்வீழ்ச்சி சிறிய குற்றாலம் போல் இருப்பதாக தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டுள்ளதால் மயில் பாறை நீர்வீழ்ச்சி பார்க்க ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏலகிரி மலை பின்புறம் உள்ள மயில் பாறை நீர்வீழ்ச்சியில் ஆனந்த குளியல் போட்டு வருகின்றனர்.இந்த பகுதிக்கு முறையான சாலை வசதி இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் நடந்து செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சிபோல் புதிதாக ஒரு நீர்வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் மயில் பாறை நீர்வீழ்ச்சியை பார்வையிட்டு ஆய்வு செய்து, சாலை வசதி ஏற்படுத்தவும், சுற்றுலா தலமாக அறிவிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : Tirupattur ,Peacock Rock Falls , Heavy rains in Tirupattur areas: Water gushes in Peacock Rock Falls: Public bathes in joy
× RELATED திருப்பத்தூர் மாவட்ட வனப்பகுதியில்...