×

காங்கயம் அருகே சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலைக்கு நினைவு மண்டபம் அமையுமா?: சொந்த ஊரில் அமைக்க மக்கள் வலியுறுத்தல்

காங்கயம்: திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள மேலப்பாளையம், விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த ஊராகும். சொந்த ஊரான மேலப்பாளையத்தில் அவருக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், நத்தக்காடையூர் அருகிலுள்ள மேலப்பாளையத்தில் 1756 அன்று பிறந்தார்  தீரன் சின்னமலை. இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர். இவர் பழைய கோட்டைப் பட்டக்காரர் மரபு என்று கூறப்படுகிறது. இவர் இளவயதிலேயே மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற போர்ப் பயிற்சியை சிவந்தாரையர் என்பார் வழிவந்தவரிடம் கற்றுத் தேர்ந்தார்.

பயிற்சி செய்யும் முன், மேலப்பாளையத்தில் தன்கென ஒரு விநாயகர் வைத்து தினமும் வழிபட்டும் வந்துள்ளார். கொங்கு நாடு, அப்பொழுது மைசூரார் ஆட்சியில் இருந்ததால், கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்குச் சென்றது. ஒருநாள் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி மைசூர் அரசுக்குச் செல்லும் வரிப்பணத்தைப் பிடுங்கி ஏழைகளுக்கு விநியோகித்தார். அப்போது, வரி கொண்டு சென்ற வரி தண்டல்காரரிடம் சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல் என்று சொல்லி அனுப்பினார். அதுமுதல் தீர்த்தகிரிக்குச் சின்னமலை என்ற பெயரிட்டு மக்கள் அழைக்க ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்ெபனியினர் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று சின்னமலை விரும்பினார். கேரளத்திலும், கொங்கு நாட்டின் சேலம் பகுதியிலும் இருந்த கிழக்கிந்திய கம்பெனிப்படை, ஒன்று சேரா வகையில் இடையில் பெரும் தடையாகச் சின்னமலை விளங்கினார். ஐதர் லியின் மறைவிற்குப் பின் திப்பு சுல்தான் மைசூர் சீரங்கப் பட்டணத்தில் ஆட்சிக்கு வந்து கிழக்கிந்தியக் கம்பெனியிரை எதிர்த்துக் கடும் போர் செய்து வந்தார்.

மாவீரன் சின்னமலை ஆயிரக்கணக்கான இளைஞர்களைத் திரட்டி மைசூர் சென்றார். சின்னமலையின் படை சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போர்களில் திப்புவின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. குறிப்பாக 40,000 வீரர்களோடு மழவல்லியில் போரிட்ட வெள்ளையர் படைக்கு கொங்குப்படை பெரும் சேதத்தை உண்டாக்கியது. நெப்போலியனிடம் படை உதவி கேட்டுத் திப்பு சுல்தான் அனுப்பிய தூதுக்குழுவில், சின்னமலையின் மெய்க்காப்பாளர் கருப்பசேர்வையும் இடம் பெற்றிருந்தார்.

ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிராகவும் அவர்களுக்கு வரி செலுத்த முடியாது என மறுத்து அவர்களை எதிர்த்து மருது சகோதரர்களுடனும் திப்புசுல்தானுடனும் இணைந்து போர் புரிந்து பின்னர் ஆங்கிலேயர்களால் சிறைபிடிக்கப்பட்ட தீரன் சின்னமலை 1805ம் ஆண்டு சங்ககிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்டார். இந்த நிலையில் தீரன் சின்னமலையின் ஊரான மேலப்பாளையத்தில் அவருக்கு நினைவு மண்டபம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்து வளர்ந்த ஊரான காங்கயம் அருகே உள்ள மேலப்பாளையத்தில், அவருக்கு நினைவு மண்டபம் ஏதும் இல்லை, சிலையும் இல்லை. சமுதாய நலக்கூடத்தில் போட்டோவை மட்டும் வைத்துள்ளனர். தீரன்சின்னமலை வைத்து வழிபாடு நடத்திய விநாயகர் சிலை இன்றளவும் உள்ளது. விநாயகருக்கு இன்றவும் பூஜைகள் செய்து வருகின்றனர்.  இந்த நிலையில் தீரன் சின்னமலைக்கு இங்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என பல தரப்பினர் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அரசு விழாவாக நடைபெறும் மாவீரன் தீரன் சின்னமலை நினைவு நாள் நிகழ்ச்சி நாளன்று ஈரோடு மாவட்டம், சேலம் மாவட்டங்களில் மட்டும் அரசு விடுமுறை தினமாக அறிவித்து நடைபெற்று வருகிறது. சின்னமலையின் பூர்வீகமான மேலப்பாளையம் பகுதியில் அரசு விழாவாக நடத்த வேண்டும். தீரன் சின்னமலைக்கு இங்குநினைவு மண்டபம் அமைக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.

Tags : Theeran Chinnamalai ,Kangayam , Will a memorial hall be built for freedom fighter Theeran Chinnamalai near Kangayam?: People urge to build it in his hometown
× RELATED மருதுறை ஊராட்சியில் குடிநீர் குழாய்,...