×

தமிழக அரசின் விருது பெற்ற கம்பம் கிளை நூலக கட்டிடம் சீரமைக்கப்படுமா?: முழு நேரமாக மாற்றவும் வாசகர்கள் வலியுறுத்தல்

கம்பம்: தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் 1956 ஆண்டு தொடங்கப்பட்டது கம்பம் கிளை நூலகம். 40 ஆண்டுகள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த இந்த நூலகத்திற்கு, கம்பம் டி.எஸ்.காமாட்சி கவுடர் அரசு மருத்துவமனை பின்புறம் தானமாக வழங்கிய 10 சென்ட் நிலத்தில், சொந்த கட்டிடத்தில் கம்பம் கிளை நூலகம் 1996ம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கியது. தற்சமயம் 114 புரவலர்களையும், 6300க்கும் மேற்பட்ட உறுப்பினர்களையும் கொண்டிருக்கும் இந்த நூலகத்தில் பாடநூல்கள், பொதுஅறிவு, போட்டித்தேர்வு, குடிமைப்பணி நூல்கள், அகராதி, கலைக்களஞ்சியம், வரலாற்று நாவல்கள், கதை, கவிதை என 54 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.

இந்நூலகத்தில் குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவும், கணிப்பொறி பிரிவும் உள்ளதோடு, தேனி மாவட்டத்தில் அரசின் போட்டி தேர்வுகளுக்கு வாசகர் வட்டத்தால் இலவச பயிற்சி அளிக்கும் மையமாக இந்த நூலகம் மட்டுமே செயல்பட்டு வருகிறது. வாசகர் வட்டம் மூலம் மாதந்தோறும் பொதுமக்கள் மத்தியில் நூலகப் பயன்பாட்டு விழிப்புணர்வு நிகழ்வுகள், கலந்துரையாடல், நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் புத்தக கண்காட்சி, நூலகங்களுக்கு தேவையான நன்கொடை பொருள்கள் பெறுதல் போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. சிறந்த செயல்பாட்டுக்காக இக்கிளை நூலகம் தமிழக அரசின் 2020ம் ஆண்டுக்கான சிறந்த நூலகமாக தேர்வு செய்யப்பட்டு நூலக ஆர்வலர் விருது பெற்றுள்ளது.

இவ்வளவு சிறப்புமிக்க கம்பம் தெற்கு கிளை நூலகத்தின் கட்டிடம் கட்டி 26 ஆண்டுகள் ஆனதால் தற்போது மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. கட்டிடத்தின் மேற்கூரை வழியே மழைநீர் ஒழுகுகிறது. மேற்கூரையின் ஒருபகுதி கீழே விழும் அபாய நிலையில் உள்ளதால் அப்பகுதிக்கு வாசகர்களை அனுமதிப்பதில்லை. நூலகத்தின் கழிப்பறை மேற்கூரையும் கழிப்பறையும் மிகவும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால் அரசின் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சிக்கு வரும் பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

தற்சமயம் தமிழக அரசு பொது நூலகத்துறையில் அனைத்து மாவட்டங்களிலும் நூலகங்களை மின்னணு சேவை நூலகங்களாக மாற்ற 500 நூலகங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதுபோல் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நூலகங்களில் மெய்நிகர் நூலகங்கள் (விர்சுவல் லைப்ரரி) கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் இவை இரண்டுக்கும் கம்பம் நூலகம் தகுதியாக இருக்கும் நேரத்தில் அடிப்படை கட்டமைப்பு சரியில்லாமல் இருப்பதால் வருத்தத்தில் உள்ளனர் இப்பகுதி வாசகர்கள்.

எனவே, இடிந்துவிழும் நிலையில் உள்ள கம்பம் கிளை நூலக கட்டிடத்தை சீரமைக்கவும், மாணவர்களும் போட்டி தேர்வாளர்களும் பயன்படுத்தும் வகையில் இந்த நூலகத்தை முழுநேர நூலகமாக மாற்ற வேண்டும் என வாசகர் வட்டம் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து வாசகர்கள் வட்ட தலைவர் கவிஞர் பாரதன் கூறுகையில், ‘‘ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை வசிக்கும் கம்பம் நகரில் பொது மக்களுக்கு பயனுள்ளதாக விளங்கும் இந்த கிளை நூலகத்தின் கட்டிடம் 26 ஆண்டுகள் பழமையானது என்பதால் மேற்கூரையும், கழிப்பறையும் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது.

அதுபோல் போதுமான நேர வசதியில்லாததால், மாணவர்கள், பொதுமக்கள், போட்டித் தேர்வாளர்கள், அதிக நேரம் நூலகத்தைப் பயன்படுத்த முடியவில்லை.
எனவே, இந்த நூலகத்தின் இடிந்த கட்டிடத்தை சீரமைக்கவும், இக்கிளை நூலகத்தினை முழு நேர நூலகமாக (காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை) மாற்றவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Tags : Tamil Nadu Government ,Pole Branch Library Building , Tamil Nadu Government's Award-Winning Gampam Branch Library Building To Be Renovated?: Readers Urge To Make It Full Time
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...